ஸ்டாலினை சுற்றி நான்கு வியாபாரிகள்: பா.ம.க., அன்புமணி விமர்சனம்
விருத்தாசலம்: “முதல்வர் ஸ்டாலினை சுற்றிலும் நான்கு வியாபாரிகள் உள்ளனர்,” என பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
தே.ஜ., கூட்டணியில் போட்டியிடும் விருத்தாசலம் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் முருகு மாறன், புவனகிரி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழித்தேவன் ஆகியோரை ஆதரித்து, விருத்தாசலத்தில் அன்புமணி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது: தே.மு.தி.க., வேட்பாளரான, அக்கட்சி பொதுச் செயலர் பிரேமலதா, கடந்த 2021 தேர்தலில், இதே விருத்தாசலம் தொகுதியில், டிபாசிட் இழந்தவர். அப்போது சென்னைக்கு சென்றவர், இப்போது தான் திரும்பி வந்துள்ளார்.
தி.மு.க., மீது கோபமாக இருந்தவர் விஜயகாந்த். ஆனால், தி.மு.க.,வுடன் பிரேமலதா கூட்டணி வைத்துள்ளார். விஜயகாந்த் ஆன்மா இதை மன்னிக்காது.
விருத்தாசலத்தை மாவட்டமாக்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, ஏமாற்றினார். ஆனால், பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும், விருத்தாசலம், தனி மாவட்டமாகும்.
தோல்வி பயத்தால், கடலுார் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., ஒதுக்கி விட்டது. மக்களுக்கு ஏதும் செய்யாததால், தனி நபர் விமர்சனத்தை தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர்.
தி.மு.க.,வினருக்கு டில்லிக்கு சென்று பேச தெரியாது. முதல்வர் ஸ்டாலினை சுற்றி அமைச்சர்கள் என்ற பெயரில் நான்கு வியாபாரிகள் உள்ளனர்.
தலைமை வியாபாரி வேலு, அடுத்த வியாபாரி சேகர்பாபு, மூன்றாவது வியாபாரி ௧௦ ரூபாய் பாலாஜி, அடுத்த வியாபாரி நேரு. இவர்கள் எல்லாம் மணல், மலை, மரம், கிட்னி ஆகியவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்