'கோட்சேவின் தம்பிகள் ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்பில்லை'
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், ஆந்திரா, அந்தமான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் எம்.பி., நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கேட்ட உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தி.மு.க., தலைமை மீது உங்களுக்கு அதிருப்தி இருக்கிறதா?
மதச்சார்பற்ற கூட்டணி, தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது கார்கேவின் எண்ணம். நாங்கள் அனைவரும் கருத்து தெரிவித்த பின், இறுதி முடிவை அவர் எடுத்தார். மூத்த தலைவர்; அவருக்கு அனுபவம் உண்டு. அவர் எடுத்த முடிவு சரியான முடிவு என, ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.
த.வெ.க., - காங்., கூட்டணி அமைக்க, தாங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்து விட்டதே; அந்த முயற்சியை எடுக்காமல் இருந்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறதா?
நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டணி தொடர்பாக, தலைமை எடுக்கிற முடிவு தான் என் முடிவு. தலைமையின் முடிவை வேதவாக்காக கருதுபவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.
'நீங்கள் செய்த பல தவறுகளுக்காக, பழியை சுமந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம். திருப்பி அதே வார்த்தையை பேசுவோம்' என, திடீரென தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தது ஏன்?
தி.மு.க., மாவட்ட செயலரும், அமைச்சரும், அந்த நேரத்தில் காங்கிரசை விமர்சித்து பேசியதற்கு பதில் தர வேண்டியது எங்கள் கடமை என்பதால், அவர்களுக்கு பதிலளித்தோம். அப்போது, காங்கிரஸ் மீது விமர்சனம் எனும் தோட்டாக்கள் பாயும்போது, பதிலடி என்ற கேடயத்தை வைத்து தடுத்தோம்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளை அடையாளம் கண்ட பட்டியல் வெளியானதும், அதில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடந்து, தொண்டர்களின் உழைப்பை சிலர் விற்று தின்கின்றனர் என, ஜோதிமணி எம்.பி., குற்றம் சாட்டியுள்ளாரே?
அது அவருடைய கருத்து. அவரது குற்றச்சாட்டுக்கு, நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
தி.மு.க., ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை உட்பட பல துறைகளில் ஊழல் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை ஆதாரங்கள் சமர்ப்பித்தும், தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய மறுப்பது சரியா?
பா.ஜ., ஆளுகிற மாநிலங்களை தவிர்த்து, எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளின் அதிகாரிகளை ஏவுகணைகளாக அனுப்பி வைத்து, அரசியல் செய்து வருவது அமித் ஷாவின் மாடல். அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
'தி.மு.க., ஆட்சியில் பங்கேற்றால், அதில் நடக்கும் ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எனவே, ஆட்சியில் பங்கை நாங்கள் வலியுறுத்தவில்லை' என, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் கூறியுள்ளார். நீங்கள் ஆட்சியில் பங்கேற்றால், அந்த பிரச்னை உங்களுக்கு எழாதா?
அது அவருடைய கருத்தாக இருக்கலாம். இந்த தேர்தலில், ஆட்சியில் பங்கு என்பது இல்லை என்பது முடிவாகி விட்டது. அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா.
ராகுல், பிரியங்கா ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து, தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவரா?
கடந்த மாதம் 5, 6ம் தேதிகளில் சென்னையில் நடந்த கிராம காங்கிரஸ் மாநாட்டில், ராகுல் பங்கேற்க குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால், நிலையான வழிகாட்டுதல் அடிப்படையில் அனுமதி கிடைக்கவில்லை. புதுச்சேரிக்கு, வரும் 6ம் தேதி பிரசாரத்திற்கு ராகுல் வருகிறார். தமிழகத்திற்கு அவர் அடிக்கடி வர வேண்டும் என விரும்புகிறோம்; வருவார் என நம்புகிறோம். முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து, அவர்கள் இருவரின் தேதியும் ஒன்றாக அமைய வேண்டும். ராகுலும், ஸ்டாலினும் அன்பு சகோதரர்களாக உள்ளனர். எனவே, அவர்கள் இணைந்து பிரசாரம் செய்வர்.
மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கேட்டு பெறும் என, வீராவேசமாக பேசினீர்கள். உங்கள் கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்காமல், மீண்டும் தி.மு.க., - எம்.எல்.ஏ., தளபதி போட்டியிடுகிறாரே; இது உங்களுக்கு ஏற்பட்ட தோல்விதானே?
காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளை, தி.மு.க.,விடம் வாங்கி தருவது, தமிழக காங்கிரஸ் குழுவுக்கு தலைமை வகித்த கிரீஷ் ஷோடங்கர் பொறுப்பு. தொகுதி பங்கீடு குழுவினர் தான், மதுரை வடக்கு தொகுதியை கேட்டு வாங்கியிருக்க வேண்டும். அது, தி.மு.க., 'சிட்டிங்' தொகுதி என்பதால் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக எங்களுக்கு மேலுார், உசிலம்பட்டி தொகுதிகள் கிடைத்துள்ளன.
தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக சொல்லப்படும், 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்து, தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என, பா.ம.க., தேர்தல் அறிக்கையில் கூறியது உண்மையா?
மருத்துவக் கல்லுாரி ஊழல் வழக்கில் சிக்கிய அன்புமணியே, சி.பி.ஐ., விசாரணைக்கு பயந்து அரசியல் செய்கிறார். ஊழல் வழக்கில் மாட்டிக்கிட்டு முழிக்கிறார். அப்பாவோடு சண்டை போட்டு, கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி வைத்திருக்கிறார். அவர் சொல்வதெல்லாம் உண்மையா?
'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதி, மாறன் போன்றோர் சங்கிகள் என, முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்கிறாரா' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாரே?
ஒன்றுக்கு இரண்டு பேசுவார். கோட்சேவின் தம்பிகள் அ.தி.மு.க.,வின் முகமூடிகளை அணிந்துள்ளனர். அவர்கள் அ.தி.மு.க., வழியாக தமிழகத்திற்குள்ளே வருவதற்கு முயல்கின்றனர். தமிழக மக்கள் அறிவு உள்ளவர்கள்; அரசியல் ஞானம் மிக்கவர்கள். அவர்களுக்கு நன்றாக தெரியும், கோட்சேவின் தம்பிகளை ஆட்சி கட்டிலில் அமர வைக்க மாட்டார்கள்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை, அரசு கையாண்ட விதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அரசு, சரியான முறையில் கையாண்டது. மத அடிப்படையில் அரசியல் செய்து பிரச்னைகளை உருவாக்க நினைக்கும் சதி திட்டங்களை அரசு முறியடித்துஉள்ளது. மத அரசியல் செய்யும் பா.ஜ.,வினரை முருகனே மன்னிக்க மாட்டார்.
செல்வப்பெருந்தகையுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காமல் எதிர்கோஷ்டி யாக செயல்பட்டதால் தான், உங்கள் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா?
யாருடைய பதவியையும் பறிக்கவில்லை. கட்சியில் உழைத்தவர்கள், தகுதி அடிப்படையில் மாவட்டத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நல்ல மனிதர்கள் தான் பதவிக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ராகுலின் தொண்டர்களாக செயல்படுவர்.
நீங்கள், மாநிலத் தலைவராக முயற்சித்து வருகிறீர்களா?
நான் எந்த பதவியையும் தேடி ப் போனதில்லை. கட்சி பணிகளையும், மக்கள் பணிகளையும் கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை. தலைவராகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.
விருதுநகர் தொகுதியில் உண்மையான வெற்றி, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு தான் கிடைத்தது. நீங்கள் அந்த வெற்றியை கடைசி நேரத்தில், தி.மு.க., ஆதரவில் தட்டி பறித்தீர்கள் என பிரேமலதா குற்றம் சாட்டியிருந்தார். தற்போது, அவரும் தி.மு.க., கூட்டணியில் இணைந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
கடந்த 2009ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், நான் முதல் முறையாக விருதுநகரில் போட்டியிட்ட போது, என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வைகோவும், கடந்த லோக்சபா தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்ட விஜயபிரபாகரனின் தாய் பிரேமலதாவும், எங்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள். நாங்கள் இணைந்து, விருதுநகர் தொகுதியில் உள்ள ஆறு தொகுதிகளின் வெற்றியை பெற்று தருவோம்.
'தி.மு.க.,வின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில், ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வர்' என, அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளாரே; அவரது பேச்சில் உண்மை இருக்கிறதா?
அ.தி.மு.க.,வின் பத்தாண்டு கால ஆட்சியில், முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களை கணக்கு போட்டு, அவர்களை எல்லாம் தி.மு.க., ஆட்சியில் சிறைக்கு அனுப்பி வைக்காமல் விட்டது தப்பு. அடுத்து, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், திண்டுக்கல் சீனிவாசன் உட்பட ஊழல் அமைச்சர்களை சிறையில் தள்ளி, நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்.
கூட்டணி கதவை திறந்து வைத்து, கடைசி வரை காத்திருந்த த.வெ.க.,விடம் கூட்டணி அமைக்காமல் தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்ததால், 'காங்கிரஸ் எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது' என, த.வெ.க., தொண்டர்கள் கூறியுள்ளனரே?
யார் கழுத்தையும் காங்கிரஸ் அறுக்காது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறவு, 22 ஆண்டு களாக நீடிக்கிறது. தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. காங்கிரசை பொறுத்தவரை நீண்டகால உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
த.வெ.க.,வுடன் கூட்டணி செல்லாமல், காங்., தவறு செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?
போகாத ஊருக்கு வழி கேட்டால் எப்படி.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்