கோகுல இந்திரா, பென்ஜமினை ஆதரித்து அன்புமணி பிரசாரம்
சென்னை: அ.தி.மு.க., வேட்பாளர்களான அண்ணா நகர் கோகுல இந்திரா, மதுரவாயல் பென்ஜமின் ஆகியோரை ஆதரித்து, அரும்பாக்கம் மற்றும் மதுரவாயலில் பா.ம.க., தலைவர் அன்புமணி, பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு படுமோசமாக தி.மு.க., ஆட்சி உள்ளது. தமிழக பெண்களுக்கு இது முக்கியமான தேர்தல்.
போதை பொருள் வினியோகம் செய்பவரின் நெருங்கிய நண்பர்தான், எதிர் அணியில் போட்டியிடும் சிற்றரசு. தமிழகத்தில் இதுவரை 12 முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
ஆனால், யாருடைய ஆட்சியிலும் பெண் குழந்தைகளை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யவில்லை. முதல் முறையாக இந்த கலாசாரம், கையாலாகாத தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இத்தனை நாட்களாக தி.மு.க.,வினர் செலுத்திய கள்ள ஓட்டுகளால்தான் தி.மு.க., ஜெயித்துக் கொண்டிருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
கோகுல இந்திரா பேசுகையில், ''இரவு நேர உணவகங்கள் அதிகம் இருப்பதால், போதை ஆசாமிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கும் பாதுகாப்பு குறைவாகவே இருக்கிறது. அதனால், போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மதுரவாயல் அரசியலில் எந்த பதவி எந்த பொறுப்புகள் வந்தாலும், தலைக்கணம் வந்துவிடும். ஆனால் பென்ஜமின் மட்டும், சம நிலையில் இருப்பவர். ஒரு புகார் கூட, அவர் மீது வந்ததில்லை. எனவே, பென்ஜமினை 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் பயன்படுத்தும் போதை பொருட்கள், நகரத்தில் மட்டுமின்றி கிராமத்திலும் கிடைக்கின்றன. இதிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த தொகுதியில் பென்ஜமினுக்கு ஓட்டளிக்க வேண்டும்.
பெண்கள், சகோதரிகள், உங்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழகத்தில் அடுத்ததாக, பழனிசாமி ஆட்சி வரவேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த பொறுப்பில் இருப்பதற்கு கூட தகுதி இல்லாத முதல்வர். என்ன நடக்குது என்று கூட தெரியாது. நிர்வாகம் என்றால் என்னவென்றும் தெரியாது. வருவார், பேப்பர் கொடுத்தால் படிப்பார்; விளம்பர படத்தில் நடித்துவிட்டு போய்விடுவார்.
நானும், மூன்று மகள்களை பெற்ற தந்தை என்பதால் கேட்கிறேன். பிள்ளை பிடிக்கிற கும்பல் காசு கொடுக்கும், கூப்பன் கொடுக்கும்; அவற்றை நம்பாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்