ஓராண்டிற்குள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை மட்டும் பட்ஜெட்டுக்கு பரிந்துரை செய்ய அரசு அறிவுறுத்தல்
சென்னை: ஓராண்டிற்குள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை மட்டும், பட்ஜெட் அறிவிப்பிற்கு பரிந்துரை செய்யும் படி, துறைகளின் உயரதிகாரிகளை, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில், ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசால், இந்த நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ரூ.10 லட்சம் கோடி
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, விரைவில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக, ஒவ்வொரு துறையிலும், ஓராண்டிற்குள் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை மட்டும் பரிந்துரைக்குமாறு, துறைகளின் உயரதிகாரிகளை, அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின் மொத்த கடன், 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தி.மு.க., ஆட்சியின் கடைசி ஆண்டில் பல துறைகளில், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
வாக்குறுதி தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அதிக நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே, அரசு நிதி நெருக்கடியில் உள்ளது.
எனவே, விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், தங்களின் துறை சார்பில் இடம்பெறும் திட்டங்களில், அதை செயல்படுத்துவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு பதில், ஓராண்டிற்குள் முடிக்கக்கூடிய திட்டங்களை மட்டும் பரிந்துரை செய்யுமாறு, துறைகளின் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதனால், அந்த திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படாது என்பதுடன், திட்டப் பணிகளையும் விரைவாக முடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்