Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பேரு வெச்சீங்களே சோறு வெச்சீங்களா?

பேரு வெச்சீங்களே சோறு வெச்சீங்களா?

காலநிலை கல்வி மேம்பாடு, கடல் அரிப்பை தடுத்தல், மாசு அளவை கண்காணித்தல் என, 2021 - 25ம் ஆண்டுகளில், ஏராளமான அறிவிப்புகள், தமிழக சட்டசபையில் அமைச்சர்களால் வெளியிடப்பட்டன. ஆனால், இதில் பெரும்பாலான அறிவிப்புகள் அமலுக்கு வரவில்லை. சுற்றுச்சூழல் துறை என்றிருந்த துறை பெயரை, காலநிலை மாற்றத் துறை என மாற்றினாலும், செயல்பாடுகளில் மாற்றம் இல்லை.

இத்துறையில் அமலுக்கு வராத அறிவிப்புகள்:

* காலநிலை கல்வியறிவை இயக்கமாக முன்னெடுத்து, பள்ளிகளில் இயற்கை முகாம்கள், போட்டிகள் நடத்த 24 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* கடல் அரிப்பை தடுக்கும் வகையில் கடலுார், துாத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில், 10 கோடி ரூபாயில் உயிர் கேடயங்கள் அமைக்கப்படும்
* ராஜபாளையத்தில் சஞ்சீவி மலையை, 5 கோடி ரூபாயில் மறுசீரமைத்து, காடுகள் வளர்க்கப்படும்
* ராஜபாளையத்தில் நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக, பல்வேறு நீர்நிலைகளை இணைக்கும் 20 ஓடைகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள், 16 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* தமிழகம் முழுதும் கைவிடப்பட்ட சுரங்கங்கள், சீர்குலைந்த நிலங்கள், மாசடைந்த நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள், 10 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* சென்னை, ராமநாதபுரம், துாத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில், கடலுக்கு செல்லும் நெகிழி கழிவுகளை தடுக்கும் மையங்கள், ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில், மொத்த விற்பனை அங்காடிகள் பூஜ்ஜிய கார்பன் வெளியீட்டு இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள், 1.50 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* வாகனங்களில் ஏற்படும் மாசு உமிழ்வை, தொலைவில் இருந்து கண்காணிக்கும் முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் 15 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும்
* மதுரை, திருச்சி, கடலுார், கோவை, திருநெல்வேலி நகரங்களில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பறக்கும் படைகள், 2.35 கோடி ரூபாயில் நிறுவப்படும்
* பள்ளி - கல்லுாரி மாணவர்களை சூழலியல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் வகையில், தமிழக பசுமை கரங்கள் திட்டம், 22.35 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
* தமிழகத்தில் திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு வசதிகள், 4 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்
* சென்னை, திருச்சி, கோவை, மதுரை நகரங்களில் ஒலி மாசு கண்காணிப்புக்காக, வரைபட ஆய்வு, 50 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* தமிழக ஏரிகள் தர கண்காணிப்பு திட்டம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், 5 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் நகரங்களுக்கு, பசுமை தரக்குறியீடு வழங்கும் திட்டம், 3 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
* காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை அமல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவ, 10 கோடி ரூபாயில், ஒரு நிதி ஏற்படுத்தப்படும்
* உற்பத்தியாளர், பயனாளர்களிடையே இணைப்பை ஏற்படுத்தி, கழிவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய தளம் அமைக்கப்படும்
* தமிழக வேளாண் பல்கலையுடன் இணைந்து, மாசுகளால் பாதிக்கப்பட்ட மண் தர வரைபடம் தயாரிக்கப்படும்.

Advertisement