கனவாகி போன ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடு
தி. மு.க., ஆட்சி அமைந்ததும், தமிழக குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், துறையில் எந்த மாற்றமும் வரவில்லை. வழக்கம்போல் அறிவிப்புகள், ஒரு நாள் செய்தியாக நின்று போயின. சட்டசபையில் அறிவித்து நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் விபரம்:
* மனைகளுக்கான முழுத்தொகையை செலுத்திய 10,000 குடும்பங்களுக்கு, விற்பனை பத்திரம் வழங்கப்படும்
* மேம்படுத்தப்பட்ட மனைகளை, மறுவிற்பனை வாயிலாக பெற்று, தற்போது வசித்து வருவோருக்கு விற்பனை பத்திரம் வழங்க புதிய சமரச திட்டம் செயல்படுத்தப்படும்
* வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீட்டாளர்கள், 15,000 பேருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்படும்
* புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில், மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், அவர்களுக்கு தரைதளத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்
* தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் குடிசைப்பகுதி வாழ் இளைஞர்களுக்கு, முழு நிதியுதவி வழங்கி விளையாட்டுத் திறன் மேம்படுத்தப்படும்
* நிலம் வைத்துள்ள, பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்கள், சொந்த வீடு கட்டிக்கொள்ள 2.10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இதில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்
* நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, 55,000 வீடுகள் ஒதுக்கப்படும்
* திட்டப்பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், சுகாதாரமாக இருப்பதை உறுதிசெய்ய, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், தனி பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்
* குடியிருப்புதாரர்கள், மாதாந்திர தவணைத் தொகையை குறித்த காலத்திற்குள் எளிதாக செலுத்த, இணையதள அடிப்படையிலான செயலி ஏற்படுத்தப்படும்
* வீட்டுவசதித் தேவை, இருப்பு, நிதி ஆதாரங்கள், வீட்டுவசதி சந்தை செயல்திறன், முதலீடுகள் சார்ந்து, அரசு துறைகள் கொள்கை முடிவெடுக்க, ஒருங்கிணைந்த வீட்டுவசதி தகவல் அமைப்பு உருவாக்கப்படும்
* சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், எழில் நகர் பகுதியில், 6,000 அடுக்குமாடி குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணிகள், 40 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்