வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்: கோ.அரி உறுதி
திருத்தணி: “அனைத்து கிராமங்கள் மற்றும் நகரத்தில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு நாங்களே வீட்டுமனை வாங்கி, புதிய வீடுகள் கட்டி தருவோம்,” என, அ.தி.மு.க., வேட்பாளர் கோ.அரி உறுதியளித்தார்.
திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்.பி., கோ.அரி, ஒன்றிய செயலர் இ.என்.கண்டிகை ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்று, திருத்தணி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வீரகநல்லுார், தாடூர், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம், வி.கே.என்.கண்டிகை, செருக்கனுார் உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கோ. அரி பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். சிறுபான்மை துறையினர் நலன் காக்கும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் கஞ்சா, போதை மாத்திரை கடத்தல், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகளவில் நடந்தன.
இதற்கு முடிவு கட்டுவதற்கு, வரும் 23ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட்டு, அ.தி.மு.க.,வை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், திருத்தணி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுவரை வீடுகள் இல்லாதவர்களுக்கு நாங்களே வீட்டுமனை வாங்கி, வீடுகள் கட்டி தருகிறோம்.
தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் கட்டாயம் நிறைவேற்றப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சிப்காட் தொழிற்சாலை கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்