Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கையில் பத்திரம் இருக்கு; பணம் இல்லை

கையில் பத்திரம் இருக்கு; பணம் இல்லை

- நமது நிருபர் -

தேர்தலில், 'சீரியஸாக' போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு, பிரசார நாட்களில், நாளொன்றுக்கு ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 65,000 - 75,000 ரூபாய் செலவாகிறது. ஒவ்வொரு தொகுயிலும் சராசரியாக 230 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1.50 கோடி ரூபாய் இருந்தால் தான் களத்தில் நிற்க முடியும். வழக்கமாக, வேட்பாளரின் கட்சி தலைமை அவருக்கு நிதி உதவி செய்யும்.

தி.மு.க., மட்டுமே, தன் வேட்பாளர்களுக்கான அன்றாட செலவுகளுக்கு உதவி செய்கிறது. அ.தி.மு.க., உட்பட மற்ற அனைத்து கட்சி வேட்பாளர்களும் திணறுகின்றனர். இதில், கட்சி தலைமை உதவி செய்யாதது ஒரு பக்கம்; தி.மு.க.,வின் ராஜதந்திரம் மற்றொரு பக்கம்.

த.வெ.க., மற்றும் நா.த.க., வேட்பாளர்களுக்கு, தலைமையிடம் இருந்து முற்றிலும் எந்த நிதி உதவியும் இல்லை. த.வெ.க.,வில் சில வேட்பாளர்கள், விஜயை நம்பி தங்கள் மொத்த சொத்தையும் அடமானம் வைத்துள்ளனர். 'திருட்டு நிதியை விட திரள் நிதி மேல்' என்று முழங்கும் நா.த.க.,வில், 'திரள் நிதி சேகரிக்கப்படுகிறது. அது விரைவில் பிரித்துத் தரப்படும்' என்று, வேட்பாளர்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியில் நிதி என்பதை பற்றி அவர்கள் கேள்வியே படவில்லை. காங்கிரசில் ஒரு சில வேட்பாளர்களுக்கு தி.மு.க., உதவி வருகிறது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளுக்கும், தி.மு.க.,விடம் இருந்து அந்தந்த தொகுதிக்கு பொறுப்பான அமைச்சர்கள் வாயிலாக ஓரளவுக்கு உதவி கிடைக்கிறது.

தே.மு.தி.க.,விற்கு செய்ய வேண்டியவற்றை ஏற்கனவே செய்தாகிவிட்டதால், அந்த கட்சி வேட்பாளர்களுக்கு தி.மு.க., உதவி செய்வதில்லை. இதனால், அந்த கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளில், பிரேமலதா, விஜயபிரபாகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் தவிர மற்ற ஏழு வேட்பாளர்களும், பிரசாரத்திற்கு உடன் வருவோருக்கு டீ -- காபி வாங்கிக் கொடுப்பதற்கு கூட வழியில்லாமல் தத்தளிக்கின்றனர். தி.மு.க., கூட்டணியில் ஏகப்பட்ட கட்சிகள் இருப்பதால், அனைத்து கட்சி தொண்டர்களையும் தனித்தனியே திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.

பா.ஜ.,வை பொறுத்தவரை, அக்கட்சி வேட்பாளர்களுக்கு சென்று சேர வேண்டிய நிதி, பகுதி பகுதியாக அனுப்பப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.,வில், வசதி படைத்த வேட்பாளர்களையே தேர்வு செய்து, அன்றாட செலவுகளை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. வசதி படைத்தவர்கள் என்றாலும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் தடுமாறி வருகின்றனர். இது பற்றி அ.தி.மு.க., வேட்பாளர் ஒருவர், 'என்னிடம் சொத்து இருக்கிறது. அதை அடகு வைத்து தான் நிதி திரட்ட வேண்டும். பத்திரத்தை வாங்கிக்கொண்டு கூட பணம் தராமல் இருப்பதால், நான் எப்படி நிதி திரட்டுவது' என்று வினவுகிறார். இவரைப் போன்ற சுயநிதி வேட்பாளர்கள், வழக்கமாக மூன்று வழிகளில் ப ணம் திரட்டுவர்.

1. 'எம்.எல்.ஏ., ஆன பின், கணிசமான ஒப்பந்தங்களை பெற்றுத் தருகிறேன்' என்ற வாக்குறுதியின் அடிப்படையில், ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெறுவர். அவர்கள், யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று கணித்து, அவர்களுக்கே பணத்தை கொடுப்பர்

2. தொழில் நிறுவன முதலாளிகள், பெரிய கட்சி வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. அவர்களும், வெற்றி -- தோல்வி வாய்ப்புகளை கணித்தே பணம் தருவர்

3. 'பைனான்சியர்'களிடம் சொத்து பத்திரங்களை அடகு வைப்பது.

இவற்றில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை தி.மு.க., கிடுக்கிப்பிடியில் வைத்துள்ளது. மேலும், இந்த தேர்தலில், ஆட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த அலையும் தென்படவில்லை. விஜய் வரவு, யாருடைய வெற்றி - தோல்விக்கு வழிவகுக்கும் என, யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. அதனால், ஒப்பந்ததாரர்களும் முதலாளிகளும் எந்த ஒரு கட்சிக்கும் தாராளமாக கொடுக்க தயங்குகின்றனர். அடகு வைத்து, கடன் வாங்குவது மட்டுமே பெரும்பாலான வேட்பாளர்களுக்கு மீதமுள்ள ஒரே வழியாக உள்ளது.

அதற்கும் இப்போது, தி.மு.க., 'செக்' வைத்துள்ளது. இது பற்றி சில வேட்பாளர்களிடம் பேசியபோது:

முன்பு, 'பைனான்சியர்'கள் பெரும்பாலும் அ.தி.மு.க., பின்புலத்தை கொண்டவர்களாகவே இருந்தனர். அ.தி.மு.க.,வின் 10 ஆண்டு கால ஆட்சியில் சம்பாதித்த பணம், தமிழகம் எங்கும் 'மைக்ரோ பைனான்ஸ்' தொழிலில் விதைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க., ஆட்சி வந்தவுடன், இந்த தொழிலுக்கு தி.மு.க., பிரமுகர்களிடம் இருந்து அபரிமிதமான நிதி வரத் தொடங்கியது. அதே நேரம், பாதுகாப்பு, கடன் வசூல் ஆகியவற்றுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான 'பைனான்சியர்'கள் தி.மு.க., ஆட்களாகி விட்டனர். அதனால், எந்த கட்சி சார்பாக நின்றாலும் நிதி திரட்ட, தி.மு.க.,வை நாட வேண்டி உள்ளது.

தொழில் தி.மு.க., கையில் இருப்பதால், தி.மு.க., வேட்பாளர்களுக்கு சற்று குறைந்த வட்டியில் கூட கடன் கிடைக்கிறது. ஆனால், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவே மறுத்துவிடுகின்றனர். இவ்வாறு அந்த வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

இப்படி திண்டாடி வரும் அ.தி.மு.க., வேட்பாளர்கள், கட்சி தலைமையிடம் இருந்து கடைசி நேரத்தில் ஏதேனும் உதவி கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கள நிலவரத்தை பார்த்து வரும் அவர்கள், தாங்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று கணித்தால், கடைசி நேரத்தில் வரும் உதவியை, தாங்கள் செய்த செலவை ஈடுகட்டவும், வாங்கிய கடனை அடைக்கவும் பயன்படுத்தி, பட்டுவாடாவை கைவிட வாய்ப்புள்ளதாக அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஒருவர் நொந்துகொண்டார்.

அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு பணம் போகாமல் பார்த்துக்கொள்ளும் தி.மு.க., சூட்சுமமாக த.வெ.க., வேட்பாளர்கள் சிலருக்கு கடன் கிடைக்கும்படி செய்துள்ளது. தொங்கு சட்டசபை உருவாகும் சூழலில், அந்த த.வெ.க., வேட்பாளர்கள் வென்றிருந்தால், அவர்களை தங்கள் பக்கம் எளிதாக இழுக்க முடியும் என்பது தி.மு.க., கணக்கு.

இந்த தேர்தலில், 3,000 கோடி ரூபாய்க்கு மேல் 'பைனான்சியர்'களின் பணம் களத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி கிடைப்பதில் கூட சூட்சுமமாக செயல்பட்டு, தி.மு.க., தனது களப்பணியின் மேன்மையை மீண்டும் நிரூபித்துள்ளது.

Advertisement