'ராமதாசுக்கு ஏதாவது நடந்தால் சும்மா இருக்க மாட்டேன்'
'பா .ம.க., நிறுவனர் ராமதாசுக்கு ஏதாவது நடந்தால், அவரை சுற்றியிருப்பவர்களை சும்மா விடமாட்டேன்' என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்தார்.
சேலத்தில் நேற்று முன்தினம், தேர்தல் பிரசாரத்தில் பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கும்போது, ராமதாஸ் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக, அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். விருத்தாசலத்தில் பிரசார கூட்டத்தில் அன்புமணி பேசிக் கொண்டிருந்தபோது, ராமதாஸ் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை பா.ம.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
உடனே கோபத்துடன், 'ராமதாசுக்கு ஏதாவது நடந்தால், அவரை சுற்றியிருப்போரை சும்மா விட மாட்டேன்' என்று எச்சரித்தார். நேற்று முன்தினம், ராமதாஸ் இல்லாத நேரத்தில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்ற அன்புமணி, அம்மா சரஸ்வதியிடம் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாசை சந்திக்க, அன்புமணி முடிவு செய்துள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்