காங்., குளறுபடியால் 'இண்டி' கூட்டணி கல... கல...
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி வெளியாகிறது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் இருந்து வரும் களநிலவர தகவல்களால் யார் வெற்றி பெறுவார் என்று கடும் குழப்பத்தில் அனைத்து கட்சிகளுமே உள்ளன.
இதில் ஓட்டு எண்ணிக்கையின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலையில், பெரும்பாலும் தங்களுக்கு சாதகமாக இருக்காது என, இண்டி கூட்டணி கட்சியினர் நினைக்கின்றனர்.
இதற்கு முழு காரணமாக தி.மு.க., தரப்பில் கூறுவது, கூட்டணிப் பேச்சுவார்த்தை துவக்கம் முதலே, இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் காங்., தரப்பில் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.
துவக்கத்தில், தி.மு.க., கட்சித் தலைமை அலுவலகத்தில் இரண்டு கம்யூ., வி.சி., கட்சியினருடன் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் காங்., அழைக்காமலே பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து காங்., பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் பேச்சுவார்த்தைக்கு ஓட்டலில் காத்திருந்த காங்., கட்சி நிர்வாகிகளை ஜெகத்ரட்சகன் உள்பட தி.மு.க.,வினர் யாருமே சந்திக்க செல்லவில்லை.
இதனால் எரிச்சலான காங்., இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேச்சு வார்த்தைக்கு 10 மணி நேரத்திற்கு மேலாக தி.மு.க., நிர்வாகிகளுடன் ஓட்டலில் காத்திருந்த ஜெகத்ரட்சகனை காங்., தரப்பிலிருந்து யாருமே சந்திக்காமல் அதிர்ச்சியை கொடுத்தது.
பின், ஒருவழியாக காங்., 16, தி.மு.க., 12, இ.கம்யூ., 1, வி.சி., 1 என, தி.மு.க., தலைமை கூட்டணி உடன்பாட்டை அறிவித்தது.
கூட்டணி பேச்சுவார்த்தை நீண்ட இழுபறியில் இருந்ததால், அதற்குள் மனு தாக்கல் முடிந்து விடும் என்ற அவசரத்தில் காங்., தலைமை 22 தொகுதிகளுக்கு 'பி' பார்மை வழங்கி விட்டது.
தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 5 தொகுதிகளில் காங்., வேட்பாளரும் களத்தில் நின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தேவையில்லாமல் போட்டியிடும் 5 பேரை உடனடியாக வாபஸ் வாங்க கூறியது.
ஆனால், போட்டியிலிருந்து விலக காங்., தரப்பில் வெளியிட்ட அறிக்கையை யாருமே கண்டு கொள்ளவில்லை.
மேலும் நட்புறவுடன் போட்டி என, காங்., தரப்பில் கூறியதால், கடும் எரிச்சலான தி.மு.க.,வினர் தங்கள் கட்சி தலைமைக்கு காங்., செயல்பாடுகளை அப்படியே தெரிவித்துள்ளனர்.
இதனால் காங்., செய்த பல்வேறு குளறுபடியால் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்குமா என்பதில் பெருத்த சந்தேகத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் உள்ளன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்