வடக்கில் இருந்து இன்றும் படையெடுப்பு : கமல்
திருச்சி:இன்றும் வடக்கில் இருந்து படையெடுப்பு வருகிறது; அதை எதிர்கொள்கிறது இந்த கூட்டணி என மநீம தலைவர் கமல் கூறியுள்ளார்.
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி ஆகிய தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: 15 மாறுபட்ட கருத்துக்களை கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்திருப்பது முதல்வர் ஸ்டாலினின் பெருந்தன்மை; அது எனக்கும் ஒட்டிக்கொண்டது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால், எனக்கென்ன லாபம் என்பதை விட, தமிழகம் வென்றால் அதைவிட பெரிய லாபம் எனக்கு வேறு எதுவும் இல்லை. தமிழகத்தின் பல்லக்கை யார் சுமந்தாலும் அவர்களுக்கே பெருமை. தமிழுக்கும், தமிழகத்துக்கும் 15 கட்சிகள் கூடி பல்லக்கு எடுக்கும் முயற்சி இது. இன்றும் வடக்கில் இருந்து படையெடுப்பு வருகிறது; அதை எதிர்கொள்கிறது இந்த கூட்டணி. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருப்பது நம் அசிரத்தையா, அவர்களின் கருணை இன்மையா என யோசியுங்கள். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஒரு கணிப்பு சொல்கிறேன். நடக்கிறதா, இல்லையா என்று பாருங்கள். இத்தனை பேருக்கு முன்னால் தைரியமாக சொல்கிறேன். திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது. இது, நான் ஒருவன் எடுக்கும் சூளுரை அல்ல; சரித்திரம் சொன்ன கதை.
வந்தாரை வாழ வைப்பது, நம் பெருந்தன்மை. ஆனால், வந்தவர்கள் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ள விடமாட்டோம். வடக்கர் படையெடுப்பை முறியடிப்பது மட்டும் முக்கியமல்ல; இந்தியா என்பதை சேர்த்து தைத்து கொடுத்தது நாமும் தான். திடீரென ஒப்பந்தத்தை மீறக் கூடாது. மீறினால், மீண்டும் போர்க்குணம் திரும்பி விடும்.இன்று நமக்கானது போல், நாளையும் நமதாகும்; இந்த நாடும் நமதாகும்.இவ்வாறு கமல் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்