Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பா.ஜ.,வின் அடிமை கட்சியா அ.தி.மு.க.,?

 பா.ஜ.,வின் அடிமை கட்சியா அ.தி.மு.க.,?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'அ .தி.மு.க., ஓர் அடிமை கட்சி' என, தி.மு.க., தொடர்ந்து இப்படி கேலி செய்து வருகிறது. மேலும், கூட்டணி பேச்சு எல்லாமே டில்லியில் தான் நடைபெற்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். அதோடு நின்றுவிடாமல், மஹாராஷ்டிரா, பீஹாரில் நடந்தவற்றையும் சுட்டிக்காட்டி, அ.தி.மு.க.,வை பா.ஜ., விரைவில் விழுங்கிவிடும் என்றும் சொல்கின்றனர்.

ஆனால் இதுவரை என்ன நடந்துள்ளது?

1 பா.ஜ., எத்தனை முயற்சித்தும், பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் பழனிசாமி சேர்க்கவில்லை. சசிகலாவையும் நெருங்கவிடவில்லை.

2 பா.ஜ., 50 இடங்கள் கேட்டதாக சொல்லப்பட்டது. 50, 40, 30 என்று எதற்கும் பழனிசாமி மசியவில்லை. 27 தான் கொடுத்தார். அதுவும் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்ட 28 தொகுதிகளை விட ஒன்று குறைவு. இத்தனைக்கும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனியாக 11 சதவீதத்துக்குமேல் ஓட்டுகள் பெற்றது; பா.ஜ.,வின் கூட்டணி 18 சதவீதத்துக்கும் மேல் பெற்றது. பழனிசாமி அதைப்பற்றி கவலைப்படவில்லை.

3 பா.ஜ.,வுக்கு சாதகமான தொகுதிகள் என்று எதையும் தரவில்லை. அதனால், அந்த கட்சியில் பெரும் பிரச்னை வெடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் கணிசமான தொகுதிகள் தரப்பட்டுள்ளன. மேலும், கொங்கு பகுதியில் அண்ணாமலை நிற்கக்கூடியதான எந்த தொகுதியையும் அ.தி.மு.க., தரவில்லை.

4 அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன. அவற்றுக்கான நிதி ஆதாரம் தமிழகத்திடம் துளிகூட இல்லை. அதைக்கூட விட்டுவிடுவோம். கொள்கை அளவில் பா.ஜ.,வுக்கு எதிரான பல நிலைப்பாடுகள் அந்த அறிக்கையில் உள்ளன. அண்ணாதுரையின் இருமொழி கொள்கை தான் தங்கள் நிலைப்பாடு என்று மிக தெளிவாக உள்ளது.

தலித் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களை பட்டியல் சாதி வரையறைக்குள் கொண்டுவர முயல்வோம் என்கிறது. மத்திய - மாநில உறவுகள், நிதி பங்கீடு என எதை எடுத்தாலும், தி.மு.க.,வுக்கு நெருக்கமாகவே அ.தி.மு.க.,வின் கொள்கை விவரிப்பு, தேர்தல் அறிக்கையில் காணப்படுகிறது.

5 ஹிந்து கோவில்கள் மீதான அரசின் ஆதிக்கம் நீக்கப்படும் என்றோ, மத சிறுபான்மையினருக்கு இணையாக பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும் சில உரிமைகள் வழங்கப்படும் என்றோ எந்த வாக்குறுதியும் இல்லை.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, பழனிசாமி தன் நிலையிலிருந்து சிறிதும் நகரவில்லை. பா.ஜ.,வுக்கு எந்தச் சலுகையும் தரவில்லை. இருந்தும் ஏன் தி.மு.க., மட்டுமல்லாமல், பொதுவான அறிவுஜீவிகள் கூட 'அடிமை' கோஷத்தை எழுப்புகின்றனர்?

அடிமை சித்திரத்தை முதலில் தீட்டியவர் ஸ்டாலின் தான். ஜெயலலிதாவின் இறப்புக்குப்பின், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டு, பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பிரிந்த பின், அவர்களை இணைக்க உறுதுணையாக இருந்தது பா.ஜ., தான். அ.தி.மு.க., பலவீனமாகி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நம்பிய ஸ்டாலினின் ஆசையில் மண் அள்ளிப்போட்டது இந்த நிகழ்வு.

அப்போதில் இருந்தே, 'அடிமைக் கட்சி' என்ற பிரசாரத்தை துவங்கிய ஸ்டாலினுடன், மக்கள் நல கூட்டணி நாயகர்களான வி.சி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., ஆகியோர் சேர்ந்து கொண்டனர். அவர்கள் சேர்ந்து கொண்டதிலும் சுயநலம் இருக்கிறது.

மக்கள் நல கூட்டணியினர், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காத அ.தி.மு.க.,வோடு சேர்ந்து, பலமுறை தேர்தலை சந்தித்து இருக்கின்றனர். பா.ஜ., தனித்துவிடப்பட்டு, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் தேர்தலை சந்தித்தால், இந்த கட்சிகளுக்குப் பேரம் பேசுவது எளிதாக இருந்திருக்கும்.

தி.மு.க., போதிய இடங்கள் கொடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க., பக்கம் போய்விடலாம். 1996 முதல் 2011 வரையான காலம் இவர்களுக்கு பொற்காலம். ஒவ்வொருவரும், இங்கே அல்லது அங்கே என, பல தொகுதிகளை பெற்று, வென்றும் இருக்கின்றனர்.

இந்த நால்வரும், தே.மு.தி.க., மற்றும் த.மா.கா., ஆகியோருடன் சேர்ந்து 2016ல், மக்கள் நல கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தனர். 2021ல், அ.தி.மு.க.,வோடு பா.ஜ., சேர்ந்து கொண்டது.

அந்த கட்டத்திலிருந்தே வி.சி.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.தி.மு.க.,வுக்கு, தி.மு.க., தான் ஒரே கதி என்று ஆனது. அதன் விளைவாக அவர்களுக்கு கிடைக்கும் தொகுதிகள் குறைய ஆரம்பித்தன. 2021ல் நால்வருக்கும் தலா ஆறு தொகுதிகள் கிடைத்தன. இப்போது, ம.தி.மு.க.,வுக்கு நான்கு, இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா -ஐந்து, வி.சி.க.,வுக்கு எட்டு.

அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி தொடர்ந்து, மேற்கண்ட நால்வருக்கும் 2-3 இடங்கள் கிடைத்தால் பெரிது. எனவே தான் பா.ஜ.,- - அ.தி.மு.க., மீதான தங்கள் வெறுப்பை எதிர் அணியினர் அனைவரும் வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

இப்படியெல்லாம் சொல்வதன் வாயிலாக அ.தி.மு.க.,வையும் பா.ஜ.,வையும் பிரித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தனர். 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோற்றவுடன் அந்த நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் பா.ஜ.,விற்கு உள்ள மதவாத பிம்பத்தால் தான் தோல்வி ஏற்பட்டதாக கருதி, பா.ஜ., உடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக்கொண்டது.

தொடர்ந்து, 2024 லோக்சபா தேர்தலில் தனித்து நின்றதால், லாபம் முழுதும் தி.மு.க., கூட்டணிக்கே கிடைத்தது. அனைத்து இடங்களும் தி.மு.க., கூட்டணி வசமானது.

அப்போது பாஜ., -- அ.தி.மு.க., கூட்டணி இருந்திருந்தால், இருவருக்கும் சில இடங்களாவது கிடைத்திருக்கும். இதை உணர்ந்த உடனேயே இருவரும் மீண்டும் சேர்ந்துகொண்டனர். யாரோ சிலர், 'அடிமை' என்றும் 'மதவாத சக்தி' என்றும் சொல்வதை வைத்துப் பிரிந்தால், ஆதாயம் ஸ்டாலினுக்கு தான் என்பதை அ.தி.மு.க., உணர்ந்து கொண்டது.

எனவே அடிமை, மதவாதம் போன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் இரு கட்சிகளும் இப்போது பயப்படுவதில்லை. சொல்லப்போனால் அந்த சொல்லாடல்களை கண்டுகொள்வதே இல்லை.
பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்

bseshadri@gmail.com

Advertisement