சரிவில் இருந்து தி.மு.க.,வை மீட்க நடைபயணம் மேற்கொள்கிறார் உதயநிதி?
சென்னை: சரிவில் இருந்து தி.மு.க.,வை மீட்க, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தமிழகம் முழுதும் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில், 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தி.மு.க., தோல்வியடைந்தது; முதல்வராக இருந்த கட்சி தலைவரான ஸ்டாலின், சென்னை கொளத்துார் தொகுதியில் தோற்றார். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய, குழு ஒன்றை ஸ்டாலின் அமைத்துள்ளார்.
கடந்த 2011ல், தி.மு.க., ஆட்சியை இழந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல், மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, 2016 தேர்தலுக்காக சுற்றுப்பயணத்தை, 2015, செப்டம்பரில் ஸ்டாலின் தொடங்கினார். அந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
எனினும், தி.மு.க., மீண்டதோடு, அந்த தேர்தலில் முதல்வரான ஜெயலலிதாவுக்கு இணையாக ஸ்டாலின் வளர்ந்தார். அந்த பாணியில் உதயநிதியையும் வளர்க்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி, ஆந்திர அரசியல் பாணியில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன், நடைபயணம் செல்ல உதயநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அது நடக்காமல் போய் விட்டது.
தற்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரிய வெற்றியை பெற்று, தமிழக முதல்வராகி விட்டார். அவரை வீழ்த்த வேண்டும் என்றால், இப்போதே களத்தில் இறங்க வேண்டும் என்பது தி.மு.க., தலைமையின் எண்ணம்.
உதயநிதியின் நடைபயணத்தில், மக்களை சந்திப்பதுடன், தி.மு.க.,வினரை உற்சாகப்படுத்தி, கட்சி கட்டமைப்பை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி, நடைபயண திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் முடிந்ததும், திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

ஒரு டப்பு ஒரு பப்பு