Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியில்லை; பின்வாங்கினார் திருமாவளவன்

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியில்லை; பின்வாங்கினார் திருமாவளவன்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அந்தத் தொகுதியில் ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர் கூறியதாவது; 2001ல் மங்களூர் (தற்போதைய திட்டக்குடி) தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டரை ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தேன். எம்எல்ஏ பதவியை இலகுவாக உதறித் தள்ளி விட்டு வெளியே வந்தேன். 2006ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் புதுச்சியுடன் சேர்த்து 10 இடங்களில் போட்டியிட்டேன். அப்போது, மங்களூர் தொகுதியிலேயே போட்டியிட விரும்பினேன். ஆனால், கடைசி நேரத்தில் என்னுடைய கட்சி நண்பர் கடலூரில் ஏதேனும் ஒரு தொகுதி வேண்டும் என்று கேட்டார்.

செல்வப்பெருந்தகை தான்...


ஆகவே நான் கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தேன். நான் போட்டியிடுவதற்காக பெற்ற மங்களூர் தொகுதியை அவருக்கு கொடுத்தேன். வெளிப்படையாக சொல்கிறேன், தற்போதைய காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தான். அப்போது, அவருக்கு திருப்போரூர் கேட்டு பெற்றிருந்தோம். அப்போது, அது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஏனெனில் அந்த சமயம் சமூக ஊடகங்கள் இல்லை.

ஜெ., கோரிக்கைக்கு மறுப்பு


பதவி மீது எனக்கு ஆசை இல்லை என்பதற்கு இதுவும் சான்று. அப்போது, போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்எல்ஏ தேர்தலில் தொடர்ந்து போட்டியிடும் சூழல் அமைந்திருக்கும். 2009ல் பார்லி தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2006ல் இருந்து தனிச்சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போது, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்த போதும், அதற்கு மறுப்பு தெரிவித்தேன். அன்று மணிச்சின்னத்தில் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 2 தொகுதிகளில் விசிக வென்றது.
2009ல் உச்சநீதிமன்றம் வரை சென்று நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதில் இருந்து பார்லி தேர்தலில் மட்டுமே போட்டியிட்டேன். 2016ல் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

நயவஞ்சகம்


ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், 2021லும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டிருந்து இருப்பேன். 2019ல் எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2021ல் எனக்கு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடலாம் என்ற உணர்வு எழுந்தது. ஆனால், அப்போது நான் அந்த முடிவை எடுக்கவில்லை. இருப்பினும், அந்த உணர்வு என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது.
2026 சட்டசபை பொதுத்தேர்தல் வழக்கமான பொதுத்தேர்தல் கிடையாது. வலதுசாரிகளின் கைகள் ஓங்குகின்றன. கடந்த ஓராண்டுக்கு மேலாக நாங்கள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, விசிக மற்றும் என்னை குறிவைத்து, எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். நயவஞ்சகமாக என்னை அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேற்ற நினைத்தார்கள்.
ஆனால், இன்று திமுக தலைமையிலான கூட்டணி, கட்டுக்கோப்பாக களம் காண்கிறது என்றால், அதற்கு திருமாவளவன் முக்கிய காரணம் என்பதில் பெருமிதத்தோடு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

தொங்கு சட்டசபையா?


எந்த ஆசை வார்த்தைக்கும் இணங்காமல், எந்தத் தூண்டலுக்கும் இலக்காகாமல், உறுதியாக நின்று திமுக கூட்டணியை காப்பதில் பெரும் பங்காற்றியுள்ளேன். அதிலும் குறிப்பாக, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக தொடர்ந்து முழக்கமிட்டு வந்த நிலையில், இந்தத் தேர்தலில் அந்தக் கோரிக்கையை முன் வைப்பீர்களா என்று கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தான்.
கூட்டணி ஆட்சிக்கான சூழல் இது இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தோம். நான் போட்டியிடப் போவதாக சொன்னவுடன், ஏதேதோ யூகங்களை கட்டமைத்துள்ளனர். திருமாவளவன் பதவி ஆசைப் பெற்று எம்பி பதவியை விட்டு விட்டு, எம்எல்ஏவுக்கு போட்டியிடுவதாகவும், அப்படி இங்கு வந்து கூட்டணி ஆட்சிக்கு முயற்சிக்கப் போவதாகவும், துணை முதல்வர் ஆக ஆசைப்படுவதாகவும், தொங்கு சட்டசபை தான் உருவாகப்போவதாக திருமாவளவன் யூகிப்பதாகவும், அதனால் தான் சட்டசபையில் அவர் இருந்தால் தான் கூட்டணி ஆட்சிக்கான கனவை உயர்த்திப் பிடிக்க முடியும் என்று செய்திகளாக்குகின்றனர்.

கட்சி தாவல் இல்லை


ஏற்கனவே உள்ள 3 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காதது, அவர்கள் திமுக ஆதரவு நிலையை எடுத்ததால் தான் என்று தவறான அவதூறுகளை பரப்புகின்றனர். நான் இந்தக் கூட்டணியில் உறுதியுடன் நிற்கிறேன்.
அதைத்தான் அவர்கள் சட்டசபையில் எதிரொலித்தார்கள். நான் பேசாததையும், சொல்லாததையும் அவர்கள் பேசவில்லை. நான் பேசிய அரசியலுக்கு முரண்பட்ட அரசியலை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் மிகச் சிறப்பாக விசிகவின் அரசியலை சட்டசபையில் எடுத்துரைத்தார்கள். அவர்களின் பங்களிப்பை எண்ணி பெருமைப்படுகிறேன்.
அவர்களை வெளியேற்றியதற்கு எதுவும் காரணமில்லை. நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்பதும், சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர எந்த நோக்கமும் இல்லை. கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால், வெளியே எம்பியாக இருந்து கொண்டு கூட செய்ய முடியும். சட்டசபைக்கு சென்றால் தான் செய்ய முடியும் என்று இல்லை.

இதுவும் ராஜதந்திரம்



விசிக மற்றும் திருமாவளவனுக்கு எதிரானவர்கள் அவதூறுகளை பரப்புகின்றனர். என்னை யாரும் அதிகாரம் செய்ய முடியாது. எனக்கு கட்டளையிட்டு வேலை வாங்க யாராலும் முடியாது. இந்த 5 நாட்களில் ஏதோ உள்நோக்கத்தோடு சட்டசபைக்கு செல்ல முயற்சிக்கிறார் என்ற கட்டுக்கதையை உருவாக்கி, எங்களின் கூட்டணி நலனை பாதிக்கும் வகையில் அவதூறு பரப்புகின்றனர். யுத்தக் களத்தில் முன்னோக்கி செல்வது ஒரு ராஜதந்திரம் என்றால், ஒரு அடி பின்னோக்கி செல்வதும் ராஜதந்திரம் தான்.

முடிவு வாபஸ்


நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார் கோவில் தொகுதியில், மறைந்த தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணி போட்டியிடுவார், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement