Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


படிப்படியாக குறையும் நோட்டா; தமிழகத்தில் வெறும் 0.41%

படிப்படியாக குறையும் நோட்டா; தமிழகத்தில் வெறும் 0.41%

புதுடில்லி: தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 'நோட்டா' எனப்படும் யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு, மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் மட்டும் 1.29 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 0.81, புதுச்சேரியில் 0.73 மக்கள் எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போடவில்லை. கேரளத்தில் 0.58 சதவீத வாக்காளர்கள் மட்டுமே நோட்டா பட்டனை அழுத்தியுள்ளனர். தமிழகத்தில் 0.41 சதவீதம் பேர் (1,99,801) நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு, நோட்டா என்ற பொத்தான் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய புள்ளிவிபரப்படி, கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களிலும் நோட்டாவுக்கு ஓட்டு போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024ல் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டுக்கு முன், எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், அதற்கான 'படிவம் 49-O'ஐ நிரப்பி, தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ஓட்டுச் சாவடியிலேயே இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டியிருந்ததால், வாக்காளரின் ஓட்டுரிமை ரகசியம் வெளியாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்தே, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் வரிசையில் கடைசியாக நோட்டாவுக்கும் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டது.

Advertisement