ஒரு வேட்பாளர் இரு தொகுதி: செலவு யாருடையது?
ச.ந.கண்ணன் sanakannan10@gmail.com
இந்த தேர்தலில், த.வெ.க., விஜய் போட்டியிடுவதை மட்டும் விமர்சன பார்வையுடன் அணுகவேண்டி இருக்கிறது. பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிடுகிறார். லோக்சபா எம்.பி.,யாக உள்ள திருமாவளவன், நல்ல வேளை, காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடும் எண்ணத்தை விட்டுவிட்டார். இல்லாவிட்டால், தமிழகத்தில், ஒரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் வந்திருக்கும். விஜய் இரு தொகுதி களில் போட்டியிடுவதால் வரக்கூடிய இடைத்தேர்தல், அரசுக்கு நிதிச்சுமை மட்டும் அல்ல, மக்களுக்கு நேரம் விரயமும் கூட.
ராஜ்யசபா உறுப்பினர்களான அ.தி.மு.க.,வின் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியிலும் மற்றும் பா.ஜ.,வின் எல்.முருகன், அவிநாசியிலும் போட்டியிடுகின்றனர். ஆனால், இவர்கள் வென்று, தங்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தாலும் ராஜ்யசபா தேர்தல் என்பதால் அரசுக்குப் பெரிய நிதிச்சுமை ஏற்படாது.
நரேந்திர மோடி, வாஜ்பாய், சோனியா, ராகுல் உள்ளிட்ட பல தேசிய தலைவர்களும்; ஜெயலலிதா, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்களும் இரு தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளனர். இதில், வாஜ்பாய், மாயாவதி, தேவிலால் உள்ளிட்ட சிலர், 1996க்கு முன்பு, மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட வரலாறும் உண்டு. சுயேச்சை வேட்பாளர்களும் பல தொகுதிகளில் போட்டியிட்டு கவனம் ஈர்த்துள்ளனர் .
விஜய், சட்டம் அவருக்கு வழங்கியுள்ள உரிமையை பயன்படுத்துகிறார்; தவறில்லை. நாட்டின் நிதி நிலைமையையும் அவர் சற்று எண்ணிப் பார்த்திருக்க வேண்டும் என்பது தான் நம் ஆதங்கம். இந்த விஷயத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வித்தியாசமாக பேசியிருக்கிறார்.
'ஒருவர் ஒரு பதவியிலிருந்து இன்னொரு பதவிக்கு போட்டியிடுவதும், ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதும் எங்கள் கொள்கையல்ல. இது இன்னொருவரின் வாய்ப்பைப் பறிக்கிறது' என்கிறார்.
கடிவாளம்
கடந்த 1996க்கு முன்புவரை, ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடுவதற்கு சட்டம் உரிமையளித்தது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளை தடுக்க, 1996ல் கடிவாளம் போடப்பட்டது. ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என சட்டம் திருத்தப்பட்டது.
ஒரு வேட்பாளர், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யவேண்டி இருக்கும். அந்த தொகுதிக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
இந்த சிக்கலையும் மாற்ற எண்ணியது தலைமை தேர்தல் ஆணையம். 2004லும், பின் 2016, 2022 என தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951 பிரிவு 33(7)ல் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர், சட்டசபை தேர்தலுக்கு 5 லட்சம் ரூபாயையும் லோக்சபா தேர்தலுக்கு 10 லட்சம் ரூபாயையும் அரசு கருவூலத்தில் செலுத்தும்படி, சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
சட்ட ஆணையம், 2015ல் வெளியிட்ட தனது 255வது அறிக்கையில், ஒரு வேட்பாளரை ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட அனுமதிக்கும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. ஆனால், நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தை மாற்ற, பார்லிமென்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு தான் அதிகாரம் உள்ளது.
செலவை ஏற்க வேண்டும்
இந்த பூனைக்கு மணி கட்ட, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில் 2017ல் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951ன் 33 (7)வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை.
'ஒரு நபருக்கு ஒரு ஓட்டு, ஒரு வேட்பாளருக்கு ஒரு தொகுதி என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை விதி' என்று வாதிட்டார். இவ்வழக்கின் முடிவில், ஒரு வேட்பாளர் தேர்தல் முடிவுக்காக மட்டுமல்லாமல் வேறு காரணங்களுக்காகவும் இரு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது.
சட்டத்திருத்தம் குறித்து, பார்லிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும். அமலில் உள்ள சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்று கூறி, அஸ்வினி குமாரின் மனுவை 2023 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த இடத்தில் சிறிய ஒப்பீடு. ஒரு ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்குள், உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டை நாம் ரத்து செய்தால், டிக்கெட்டுக்கு செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது. நாம் ரத்து செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு, ரயில்வே நிர்வாகம் மாற்றிக் கொடுத்துவிடும்.
இந்த அளவுக்குக்கான கண்டிப்பு, இரு தொகுதிகளில் நிற்கும் வேட்பாளருக்கு ஏன் இல்லை? ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் ஜெயித்தாலும், இடைத்தேர்தலால் உண்டாகும் செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், இனி யாராவது இரு தொகு திகளில் போட்டியிடுவரா?
சட்டசபை தேர்தலை நடத்துவது தலைமை தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அதற்கான செலவு மாநில அரசை சார்ந்தது. ஒரு சட்டசபைக்கு தேர்தலை நடத்த கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என்றும் அறியப்படுகிறது. ஆண்டு வருவாய் பற்றாக்குறை 41,635 கோடி ரூபாயாக இருக்கும் தமிழகத்துக்கு இந்தக் கூடுதல் நிதிச்சுமை அவசியமா?
Advertisement
பிரதமரே ரெண்டு தொகுதில போட்டியிட்டாரு. அப்போ எங்கே போனீங்க? சட்டமேதைகள் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தை திருத்துங்க முதல்ல.
அஞ்சு லட்சம் அல்லது பத்து லட்சம் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒரு ருபாய் ரெண்டு ருபாய் மாதிரி. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.
எதற்கு கையை தலையை சுற்றி சாப்பிட வேண்டும்? பேசாமல் ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட கூடாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1952 ஐ திருத்தம் கொண்டு வர வேண்டும்.
முன்பெல்லாம் முக்கிய வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் சுயேச்சைகளைக் கொன்று தேர்தலை COUNTERMAND ஒத்திப் போட வைக்கும் அநியாயம் கூட நடந்தது. வேட்புமனுவை அற்ப காரணங்களுக்காக நிராகரித்ததும் நடந்தது. இன்னும் பல தில்லாலங்கடி வேலைகளும் உண்டு. அதனால்தான் தலைவர்கள் தற்காப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது தப்பு. ஒருவர் ஒரு தொகுதி போட்டுவிடு வேண்டும். ஒரு வேலை இரண்டு தோகதி செய்யதல் ஒன்னு விட்டு கொடுக்கு வேண்டும். அந்த இடத்தில் மீண்டும் தேறிடல்.

யாராயிருந்தாலும் ஒரு தொகுதி செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர் ஏற்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரனும்? மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் குறும்பு?