'கோட்டையில் அமித் ஷா அமர வைப்பார் என பழனிசாமி நம்புகிறார்'
சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது; வேட்பாளர் பட்டியலை நாளை அறிவிப்போம்; வெற்றி வாய்ப்பு உள்ள 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம்.
நாங்கள் ஐந்து ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம்; 63 எம்.எல்.ஏ.,க்களை வைத்துஉள்ள அ.தி.மு.க., ஒரு போராட்டம் கூட நடத்தியது கிடையாது.
தி.மு.க.,வுக்கு முடிவு கட்ட, அ.தி.மு.க.,வுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்தோம். ஆனால், எங்களை உதாசீனப்படுத்தி விட்டனர் . கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தோம். தென்காசியில் நான் அதிக ஓட்டுகள் வாங்கினேன்.
ஆனால், அ.தி.மு.க., திருநெல்வேலியில் 6 சதவீதம், துாத்துக்குடியில் 8 சதவீதம் மட்டுமே ஓட்டுகளை பெற்றது.
தென் மாவட்டங்களில் போட்டியிட்ட ஒன்பது தொகுதிகளிலும், அ.தி.மு.க., டிபாசிட் இழந்தது. எங்களுக்குரிய மதிப்பு, மரியாதை, கவுரவம் அளிக்க அ.தி.மு.க., தயாராக இல்லை.
தனக்கு பின்னணியில் பா.ஜ., இருக்கிற தைரியத்திலும், அமித் ஷா எப்படியாவது தன்னை கோட்டையில் உட்கார வைத்து விடுவார் என்ற நம்பிக்கையிலும் பழனிசாமி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க ஏதாவது அறிகுறி தெரிந்தால், யோசித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்