'கண்டதை பேசுகிறார் பழனிசாமி'
''எந்த விஷயமும் இல்லாமல், பழனிசாமி கண்டதையும் பேசி வருகிறார்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எந்த உள்ளடக்கமும் இல்லாமல் கண்டதையும் பேசி வலம் வருகிறார். நாள்தோறும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின்றன.
தி.மு.க., கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பழனிசாமியின் தரம் கீழே இறங்குகிறது. கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க்களை ஏலம் எடுத்து, முதல்வர் ஆனவர் அவர்.
மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள், தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். நான் கேட்ட கேள்விக்கும், சவாலுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.
ஒருவேளை பழனிசாமி ஆட்சி நடந்திருந்தால், தமிழகத்தை இந்நேரம் அவர் கூறுபோட்டு விற்றிருப்பார். நல்லவேளை, அவரது ஆட்சி நடக்கவில்லை.
வரி என்ற பெயரில், தமிழகத்தின் பணம் மத்திய அரசுக்கு வேண்டும். ஆனால், தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டங்களையும் அறிவிக்க மாட்டார்கள்; பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முட்டை போட்டனர்; ரயில்வே திட்டங்களில் பட்டை நாமம் போட்டனர்.
இதை பற்றியெல்லாம் பேசாமல், தனது சொந்த கதை, சோக கதைகளை பிரசாரத்தில் பழனிசாமி பேசி திரிகிறார். தமிழகத்தில் மத்திய அரசு செய்யும் வேலையும் முறையாக நடக்கவில்லை.
கொள்ளிடம் ஆற்றில், 6,600 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மேம்பாலம் சேதம் அடைந்துள்ளது. இதனால், சீர்காழி - சிதம்பரம் இடையே போக்குவரத்து பாதித்துள்ளது.
இந்தியா முழுதும் இவர்கள் கட்டும் மேம்பாலங்கள் கொஞ்ச நாளில் இடிந்து விழுகின்றன. பல இடங்களில் திறப்பதற்கு முன்பே விழுகின்றன.
குஜராத்தில் பாலம் இடிந்து, 140 பேர் இறந்தனர். இப்படி பெரிய பட்டியல் என்னால் போட முடியும். ஊழல், பொறுப்பின்மை, அலட்சியம் நிறைந்ததுதான் மத்திய பா.ஜ., அரசு.
மே 4ம் தேதி திருமண நாள் என்றால், தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியிட்ட தேதிதான், நிச்சயதார்த்த நாள்.
தமிழகத்தின் உரிமைகளுக்கு துணிச்சலாக குரல் கொடுக்கும் ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா; அடிமை சேவகம் செய்யும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா என்பதை, மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -
Advertisement

வாசகர்கள் கருத்துகள்