பழனிசாமி போட்டியிடும் தொகுதியில் த.வெ.க., வேட்பாளர் மனு தள்ளுபடி
சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக மனு தாக்கல் செய்த, த.வெ.க., வேட்பாளரின் மனுவும், மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடியானது. அவர்கள், அ.தி.மு.க.,விடம் விலை போய் விட்டதாக, த.வெ.க.,வினர் கொந்தளித்துள்ளனர்.
இடைப்பாடியில், த.வெ.க., வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா மனுதாக்கல் செய்து இருந்தார்.
கடத்தல் மனுக்கள் மீதான பரிசீலனை, நேற்று மாலை 3:30 மணிக்கு நடந்த போது, அருண்குமார் வரவில்லை. மொபைல் போனையும் ஆப் செய்து விட்டார்.
இதனால், அருண் குமாரை கடத்தி விட்டதாக , சேலம் த.வெ.க., மேற்கு மாவட்ட செயலர் செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையே, அருண்குமார் வேட்பு மனுவில், இடைப்பாடி தொகுதி வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிவதற்கு பதில் எட்டு பேர் மட்டுமே கையெழுத்திட்டிருந்ததால், அது தள்ளுபடியானது. அவரது மனைவி நித்யா மனுவிலும் ஏழு பேர் மட்டுமே கையெழுத்திட்டிருந்ததால், அந்த மனுவும் தள்ளுபடியானது.
த.வெ.க.,வினர் கூறுகையில், 'வேட்புமனு தள்ளு படியாக வேண்டும் என்ற நோக்கத்துடன், போதிய விபரம் இல்லாமல் மனுதாக்கல் செய்துள்ளார்.
'அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர் என்பதால், அ.தி.மு.க., பொதுச்செயலரும் இடைப்பாடி வேட்பாளருமான பழனிசாமிக்கு ஆதரவாக, விலைபோய் விட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது' என்றனர்.
அ.தி.மு.க.,காரர் த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், கடந்த 2025 அக்டோபர் வரை, அ.தி.மு.க.,வில், அயோத்தியா பட்டணம் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தவர்.
மேலும், 2019 முதல் 2024 வரை அயோத்தியா பட்டணம் அ.தி.மு.க., ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்தவர். செங்கோட்டையன் வாயிலாக, அ.தி.மு.க.,வுக்கு வந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்