பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நிலை தான் பழனிசாமிக்கு நேரிடும்: தி.மு.க., சாபம்
சென்னை: ''பீஹாரில் நிதிஷ் குமாருக்கும், மஹாராஷ்டிராவில் சரத் பவாருக்கும் ஏற்பட்ட நிலைமை தான், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நேரிடும்,'' என, தி.மு.க., அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஒரு காலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, அவர் வீட்டு வாசலில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் காத்திருப்பர்.
ஆனால், இன்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் முன், டில்லி சென்று வருகிறார்.
அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும், பா.ம.க., தலைவர் அன்புமணியும் தங்கள் பிரச்னைகளை டில்லி தான் சரி செய்யும் என வெளிப்படையாகவே கூறினர்.
தி.மு.க.,வுக்கு, கூட்டணி கட்சித் தலைவர்கள் அடிமைகளாக இருப்பதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுவது வேடிக்கை. நோட்டாவுக்கும் குறைவான ஓட்டுகள் பெற்ற பா.ஜ.,வுக்கு, கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளை பழனிசாமி கொடுத்துள்ளார்.
பீஹாரில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கும், மஹாராஷ்டிராவில் சரத் பவாருக்கும் ஏற்பட்ட நிலைமை தான், வருங்காலத்தில் பழனிசாமிக்கும் நேரிடும்.
கோவாவில் பா.ஜ., வால் விழுங்கப்பட்ட மாநில கட்சிகளின் நிலை அ.தி.மு.க.,வுக்கு ஏற்படும். பழனிசாமி என்ன தான், 'மேக்கப்' போட்டு மறைத்தாலும், அவரது ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னால், மத்திய அமைச்சர் அமித் ஷா தான் இருக்கிறார்.
இவ்வாறு கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்