சமூக வலைதள பதிவுகளுடன் அரசியல் கட்சிகள் தயார்!
சென்னை: தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், அதை தங்களுக்கு சாதகமாக பரப்ப, அரசியல் கட்சிகளின், ஐ.டி., அணிகள், தயார் நிலையில் உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில், கடந்த மாதம் 23ம் தேதி பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று நடக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., என அனைத்து கட்சிகளும், தங்களுக்கே வெற்றி என்ற நம்பிக்கையுடன் உள்ளன.
எனினும், தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும், அதை தங்களுக்கு சாதகமாக்க, தங்களின் ஐ.டி., அணிகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் களமிறக்கி உள்ளன. அதன்படி, தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைக்காவிட்டால், பா.ஜ.,வின் 'பி' டீம் விஜய் என பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
புகழ் பாடும் வீடியோக்கள்
தி.மு.க., வெற்றி பெற்றால், முதல்வர் ஸ்டாலின் புகழ் பாட, 100க்கும் மேற்பட்ட, வீடியோக்கள் தயாராக உள்ளன. சமூக வலைதளங்களில், கம்பு சுற்றுவதற்காகவே, சென்னையில் கிண்டி, சின்னமலை, தேனாம்பேட்டை என மூன்று பகுதிகளில் அலுவலகங்களை தி.மு.க., மேலிடம் அமைத்திருக்கிறது.
இதே பாணியில், அ.தி.மு.க.,வினரும் தங்களுக்கு வெற்றி கிடைத்தால், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வீடியோக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இதற்கான வேலைகள் அனைத்தும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் ஐ.டி., அணி அலுவலகத்தில் நடக்கிறது.
அதேபோல், த.வெ.க., சார்பில் பனையூர் அலுவலகத்திலும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திலும், ஐ.டி., அணிக்கு கட்டுப்பாட்டு அறை திறந்து, த.வெ.க., ஆதரவாளர்கள் 120 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.
ஏராளமான குழுக்கள்
வெற்றி கிடைக்கா விட்டால், ஓட்டு எண்ணிக்கையின்போது நடக்கும் தகராறுகளை, சோக இசையுடன் கூடிய வீடியோக்களாக பதிவேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த வீடியோக்களை, 'வாட்ஸாப்' வழியே அனுப்பவும், ஏராளமான குழுக்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியை மட்டுமே மையப்படுத்தி, ஐ.டி., அணி தயாராக உள்ளது.
'வென்றால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி' என்பது நா.த.க., தேர்தல் முழக்கமாக உள்ளது. இதேபோல், காங்., - பா.ஜ., - வி.சி.க., -பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும் தயாராக உள்ளன.
Advertisement

ஆகா ஓகோ சுடாலினை மக்கள் அடித்து விரட்டியதில் எல்லை இல்லா ஆனந்தம் அடைகிறேன்... ஓட்டுக்கு 5000 ருவா கொட்டி கொடுத்தும் பணத்துக்கு மயங்கி ஓட்டு போடாத தமிழனுக்கு தலை வணங்குகிறேன்....