Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டம்

பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: கூட்டணி அமையாவிட்டால், அன்புமணி தரப்பு பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், தனித்து களமிறங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடிப்பதால், இரு பிரிவாக செயல்படுகிறது. இதில் அன்புமணி தரப்பு, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் இணைந்து விட்டதால், அந்த கூட்டணிக்கு ராமதாஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தி.மு.க., கூட்டணியில் ராமதாசை சேர்க்க, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால், பா.ம.க., - வி.சி., தொண்டர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்பதாலும் வி.சி., தலைவர் திருமாவளவன் எதிர்ப்பாலும், ராமதாசை கூட்டணியில் சேர்க்க தி.மு.க., தயங்குகிறது.

எனவே, நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் ராமதாஸ் தரப்பு, கூட்டணி பேச்சு நடத்தியது. ஆனால், 'பட்டியலின மக்களின் ஆதரவை இழக்க நேரிடும்' என பலர் எச்சரித்ததால், த.வெ.க.,வும் ராமதாசை சேர்க்க தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால், எந்த கூட்டணியிலும் சேர முடியாத நிலைக்கு ராமதாஸ் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராமதாசை குறைந்தது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட வைக்க, தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது. அப்படி செய்தால், ராமதாஸ் விரும்பும் ஒன்றிரண்டு நபர்களை வெற்றி பெற வைக்கிறோம் எனவும், தி.மு.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ராமதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, ராமதாஸ் ஆதரவு பா.ம.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, போட்டி போடுகின்றனர். ஆனால், தன்னை யாரும் கண்டுகொள்ளாதது, ராமதாசுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
எனவே, அ.தி.முக., கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகள் உட்பட 30 தொகுதிகளில், தன் தரப்பு வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement