இபிஎஸ் காண்பது கனவு: சொல்கிறார் சிதம்பரம்
கோவை: ''தொகுதி மறுவரையறைக்காக, அரசியல் சாசன சட்டத்தை திருத்துவது மிகப்பெரிய சூழ்ச்சி,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஓட்டு கேட்டு, சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் புதுச்சேரியை சேர்த்து 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இது, தொகுதி மறுவரையறைக்குப் பின் 60 ஆக உயரும். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 80 என்பது 120 ஆகும். நமக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் இடைவெளி அதிகரிக்கும்.
இனி, நாம் 60 பேர் இருப்போம்; அவர்கள் 120 பேர் இருப்பார்கள். 120 பேரை 60 பேர் எதிர் கொள்ளும்போது, நமது குரல் அமுங்கி விடும். அடுத்த கட்டமாக மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும்போது, 60 தொகுதிகள் என்பது, நமக்கு 50 ஆக குறையும். உ.பி.,யில் 120 என்பது 140 என உயரும். 90 தொகுதிகள் வேறுபாடு இருக்கும். இதற்காக, அரசியல் சாசன சட்டத்தை திருத்துவது மிகப்பெரிய மோசடி; மிகப்பெரிய சூழ்ச்சி.
என்னுடைய கருத்தை பதிவு செய்து விட்டேன்; முதல்வர் ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார். அ.தி.மு.க., பொது செயலர் இபிஎஸ்யிடம் கேட்டால், ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன் என கூறியிருக்க வேண்டும். ஆனால், 'அமித் ஷாவிடம் பேசினேன்; தமிழகத்துக்கு பாதகம் வராது என கூறியுள்ளார்' என, பதில் சொல்லியிருக்கிறார். இது, அடிமைத்தனம். பா.ஜ., ஆட்டி வைக்கும் பொம்மையாக இருக்கிறார் இபிஎஸ். பா.ஜ.,வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்.
அ.தி.மு.க., என்பது பெயரளவுக்கு முக கவசம் தவிர, முகம் பா.ஜ., நான் தான் முதல்வர் என இபிஎஸ் சொல்லிக் கொள்ளலாம்; ஆட்சி அமைக்கப் போகிறேன் என சொல்லலாம். இதை பா.ஜ., தலைவர்கள் யாரும் சொல்லவில்லை. தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தால், பீஹாரில் நிதிஷுக்கு நடந்தது போலவே நடக்கும். முதல்வராகி விடுவேன் என இபிஎஸ் காண்பது கனவு. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்