விஜய் மீதான விமர்சனத்தால் வீழ்ச்சி அடைந்த சீமான் ஓட்டுகள்
சென்னை: விஜய்க்கு எதிரான பிரசாரத்தை நா.த.க.,வினர் முன்னெடுத்த நிலையில், அக்கட்சியின் ஓட்டு 4 சதவீதம் சரிந்துள்ளது.
நா.த.க.,வின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் பொறுப்பேற்ற பின், 2016ல் தேர்தல் அரசியலுக்கு வந்தார். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்து போட்டியிட்டு வருகிறார்.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 1.10 சதவீதம் ஓட்டுககளை பெற்ற அக்கட்சி, 2019 லோக்சபா தேர்தலில், 3.89 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. அதேபோல், 2021 சட்டசபை தேர்தலில், 6.72 சதவீதம், 2024 லோக்சபா தேர்தலில், 8.22 சதவீதம் ஓட்டுக்களை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
இந்நிலையில், புதிதாக கட்சி துவங்கிய விஜயை ஆரம்ப முதலே, நா.த.க.,வினர் எதிர்த்து வந்தனர். குறிப்பாக, சீமான் பிரசாரம் செய்த இடங்களில், விஜயை கடுமையாக விமர்சித்தார். அதேபோல், அக்கட்சியின் நிர்வாகி துரைமுருகன், 'சாட்டை' என்ற 'யு டியூப் சேனல்' வாயிலாக, த.வெ.க.,வை குறிவைத்து தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதனால், த.வெ.க., வினர் மற்றும் விஜய் ரசிகர்கள், நா.த.க.,வினர் மீதான அதிருப்தியை, சட்டசபை தேர்தலில் காட்டியுள்ளனர். கடந்த முறை, 8.22 சதவீதம் ஓட்டுக்களை பெற்ற நிலையில், இம்முறை 4 சதவீதம் மட்டுமே அக்கட்சி பெற்று உள்ளது. சீமான் உட்பட பலர் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.
மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நா.த.க., அந்த இடத்தை இழந்தததற்கு, விஜயை விமர்சித்தது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்