பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு செல்வப்பெருந்தகை ஆதரவு; காங்கிரஸ் - வி.சி., மோதல்
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது காங்கிரஸ் -- வி.சி., இடையிலான மோதலாக மாறியுள்ளது.
'தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெற்றால் அக்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், ராமதாசை கூட்டணியில் சேர்க்க தி.மு.க., தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசிய தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, “விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ராமதாஸ் ஏற்றியுள்ளார். வன்னியர் சங்கக் கொடியை திருமாவளவன் ஏற்றியுள்ளார். இருவரும் இணக்கமாக இருந்தவர்கள் தான். எனவே, தேவைப்பட்டால் ஒருவரையொருவர் சந்தித்து பேசி சரிசெய்து விடுவர்,” என தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, “ஜாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை வி.சி., மாற்றிக் கொள்ளும் என்ற தோற்றத்தை திணிப்பது, நாகரிகமற்ற அரசியல் அணுகுமுறை,” எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து, காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவர் நபில் அகமது வெளியிட்ட அறிக்கையில், 'உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி விமர்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல், தி.மு.க., கூட்டணியின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இணைய முயன்ற பா.ம.க., நிறுவனர் ராமதாசால், காங்கிரஸ் - வி.சி., இடையே மோதல் உருவாகி இருப்பது, தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்