Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பழனிசாமிக்கு பாடம் புகட்டிய செங்கோட்டையன்

 பழனிசாமிக்கு பாடம் புகட்டிய செங்கோட்டையன்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஈரோடு: 'என்னை அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றிய பழனிசாமியை காலி செய்யாமல் விடமாட்டேன்' எனக்கூறிய செங்கோட்டையன், தேர்தலில் வென்று காட்டியுள்ளார்.

'அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு தேவை; இல்லாவிட்டால் பின்னடைவை சந்திக்கும்' எனக்கூறி, ஓ.பி.எஸ்., - சசிகலா, தினகரன், பிரிந்து சென்ற பலரையும் ஒருங்கிணைக்க செங்கோட்டையன் முயன்று, தோற்றார்.

பின், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்; த.வெ.க.,வில் இணைந்தார். தேர்தலில் த.வெ.க., வேட்பாளர் தேர்விலும் முக்கிய பங்காற்றினார் செங்கோட்டையன்.

இதனால், கோபி தொகுதியில் மீண்டும் செங்கோட்டையன் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக, முதல் முறை பிரசாரத்துக்கு வந்த பழனிசாமி, 'அ.தி.மு.க.,வுக்கும், எனக்கும் துரோகம் இழைந்த செங்கோட்டையனை, டிபாசிட் கூட வாங்க விடக்கூடாது.

'தொகுதியில் இருந்தே அகற்ற வேண்டும். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்ததும், கோபியில் தான் வெற்றி விழாவை கொண்டாடுவேன்' என, சபதம் செய்தார்.

தேர்தலுக்கு முன், கோபி, நம்பியூர், டி.என்.பாளையம் என, மூன்று இடங்களில் பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, செங்கோட்டையனை காட்டமாகவும் விமர்சித்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை, முன்னாள் முதல்வர் ஜெ.,வை, செங்கோட்டையன் குடும்பத்தார் சந்தித்தது என பல சம்பவங்களை பேசி, செங்கோட்டையனை ஒருமையில் பேசி சென்றார்.

இந்த பேச்சும், செங்கோட்டையனை மேலும் கொதிப்படையச் செய்யவே, பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்.

அத்துடன், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் செங்கோட்டையன் நேரடியாக பிரசாரமும், ஒருங்கிணைப்பு கூட்டமும் நடத்தி, த.வெ.க.,வினரை உற்சாகப்படுத்தினார்.

கடைசி நாளில் செங்கோட்டையன் உருக்கமாக வெளியிட்ட வீடியோவில், 'நான் மற்றவர்களை போல, சொந்த வாழ்க்கை, நடக்காததை, மக்களை குழப்பம் அடையச் செய்யும் பேச்சை பேச விரும்பவில்லை.

'அரசியல் நாகரிகம் கருதி, எவருக்கும் பதில் கூற விரும்பவில்லை. என்னை தவறாக பேசியவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்' என, பழனிசாமி பெயரைக்கூட தவிர்த்தார்.

அத்துடன், 'விஜய் வகுத்துள்ள வியூகங்களை மக்கள் ஏற்பர். தமிழகத்தில் மாற்று அரசியல் ஆட்சியை பிடிக்கும்' என்றும் தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையன் சொல்லியபடியே, பழனிசாமி நிறுத்திய வேட்பாளர் பிரபுவை தோற்கடித்து, 10வது முறையாக எம்.எல்.ஏ., ஆனார். தவிர மாநில அளவில் பழனிசாமிக்கு பெரிய சரிவு ஏற்பட்டதுடன், விஜய் முதல்வராகும் வாய்ப்பும் கிட்டியதால், பழனிசாமியின் முதல்வர் கனவும் தகர்க்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், பழனிசாமி சவாலை நிறைவேற விடாமல், களமாடிய செங்கோட்டையன், பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளார்.

Advertisement