ஓட்டு அளித்த மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் அறிவுரை
சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்ததுடன், அறிவுரையும் வழங்கி உள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். பதவியேற்றதும் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே, அரசிடம் பணம் இல்லை என்று பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்கு கொடுக்க மனசும், ஆட்சி திறமையும் தான் வேணும். கடந்த ஐந்து ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவல், வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்னைகளையும், மத்திய அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சு தான், நாங்கள் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
கடந்த அரசு, 10 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு, கஜானாவை துடைத்து விட்டு சென்றுள்ளது என்ற குற்றச்சாட்டை, முதல் உரையிலேயே சொல்லி இருக்கிறீர்கள். அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே, தமிழகத்தின் கடன் அளவு இருக்கிறது. தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து, கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில், தெளிவாக நாங்கள் சொல்லி விட்டோம்.
அது உங்களுக்கு தெரியாதா. அதன்பின், நீங்கள் பல வாக்குறுதிகளை, மக்களுக்கு கொடுத்தீங்க. உங்களுக்கு ஓட்டு அளித்த மக்களை, மீண்டும் ஏமாற்றி திசை திருப்பாதீங்க.
நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போது தான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும், எங்களை போலவே, நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என, நம்புகிறேன். ஓட்டளித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிப் பயணம் தொடர, மீண்டும் என் வாழ்த்துக்கள். இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்