Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


த.வெ.க.,வின் ஏற்றமும் இறக்கமும்!

த.வெ.க.,வின் ஏற்றமும் இறக்கமும்!

பத்ரி சேஷாத்ரி


bseshadri@gmail.com
தமிழக அரசியலில் விஜயகாந்த், கமல், ரஜினி என உச்ச நட்சத்திரங்கள் தடுமாறிய இடத்தில், விஜய் மட்டும் என்ன செய்துவிடுவார் என்று நான் அவரை துச்சமாகவே நினைத்து வந்தேன். நடிகர் விஜய், ஒரு கட்சியை ஆரம்பித்து, வெற்றிகரமாக தேர்தலில் நிற்பார் என்பதையே நான் முதலில் நம்பவில்லை.

அவரும், புதுச்சேரியில் இருந்து, ஓரளவு தமிழ் பேசும் 'புஸ்ஸி' ஆனந்த் என்பவரை அழைத்து வந்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்து, அப்படியோ இப்படியோ என நடத்தத் தொடங்கினார். விடுதலை சிறுத்தைகளில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, த.வெ.க.,விற்குள் நுழைந்ததும் கட்சிக்கு புது ரத்தம் பாய்ந்தது.

அருண் ராஜ், நிர்மல் குமார், தமிழில் ஓரளவுக்கு ஒழுங்காக பேச தெரிந்த ராஜ்மோகன், அருமையான பேச்சாளரான நாஞ்சில் சம்பத், சிறந்த கட்சி நிர்வாகம் தெரிந்த செங்கோட்டையன் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் உள்ளே வந்த பின்னரே, த.வெ.க., ஓர் அரசியல் கட்சியாக தோன்ற ஆரம்பித்தது. அதற்குமுன் இளம் ரசிகர்களின் சங்கம் போல தான் கட்சி தோற்றமளித்தது.

தேர்தல், அரசியல், ஓட்டு, ஆட்சி மாற்றம் போன்ற எதையுமே புரிந்துகொள்ளாத ரசிகர்கள்; நடிகர் விஜயை காண வேண்டும், அவருடன் 'ஸெல்பி' எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முண்டியடித்து, ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் திகில் கிளப்பினர். அதன் சோக முடிவு கரூரில் நிகழ்ந்தது. 40க்கும் மேற்பட்டவர்கள் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக, ஆளும் தி.மு.க., அரசின் கொடுங்கரங்கள் விஜய் மீது பாயத் தொடங்கின. நீதிமன்றங்கள் மூலம் அச்சுறுத்தல், காவல் துறை மூலம் புதிய கூட்டங்களுக்கு அனுமதி மறுத்தல் என்று, விஜய் முடக்கப்பட்டார். ஆனால் இத்தனையையும் தாண்டி, விஜயின் ஆதரவு வட்டம் குறையவே இல்லை.

தலித் மக்கள், பெருமளவு, விஜயை நோக்கி நகரத் தொடங்கி இருந்தனர். அவர்கள், பிற அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தனர். விஜயாவது நமக்கு ஆதரவாக இருப்பார் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

முதல் முறையாக ஓட்டு போட வந்திருக்கும் இளைஞர் பட்டாளம், விஜயின் பின்னால் அணிதிரண்டது. பெண்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர், விஜயை வாஞ்சையுடன் பார்த்தனர். மத சிறுபான்மையினர், முக்கியமாக கிறிஸ்துவர்கள், விஜயை தங்கள் பிள்ளையாக பார்த்தனர்.

தவிர, இது போன்ற ஜாதி, மத அடையாளங்களுக்குள் வராத பொதுமக்களுமே விஜயின் த.வெ.க.,வுக்கு ஏன் ஓட்டு போட கூடாது என்று எண்ணத் தொடங்கினர். இது தான், விஜய் அடைந்த மிகப்பெரிய ஆதரவு தளம்.

அதன்பின் நடந்ததெல்லாம் வீழ்ச்சியாக தான் எனக்கு தோன்றுகிறது.

விஜயின் முன், இரு பாதைகள் தெரிந்தன. அவர் தெளிவாக, பா.ஜ.,வை கொள்கை எதிரி என்றும் தி.மு.க.,வை அரசியல் எதிரி என்றும் சாடிக்கொண்டு இருந்தார். எனவே, முதல் வழி, நிரூபிக்கப்பட்ட பின்னணி கொண்ட அ.தி.மு.க.,வுக்கு அதிக இடங்கள், தனக்கு குறைவான இடங்கள் என்று கூட்டணி அமைப்பது. விரும்பினால் துணை முதல்வர் பதவி. இது, ஆந்திராவில் பவன் கல்யாண் ஏற்றுக்கொண்ட மாதிரி.

இரு கட்சிகளும் இணைந்தால், கிட்டத்தட்ட 37- - 38 சதவீத ஓட்டுகளை பெறுவர். இது நிச்சயமாக அ.தி.மு.க., - -த.வெ.க., அணிக்கு பெருவெற்றியை தந்திருக்கும்.

இரண்டாவது வழி, தன் தலைமையில் ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்குவது. அதில் ஓரிரு அறியப்பட்ட கட்சிகளாவது இருக்க வேண்டும். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளிலிருந்து பெரிய தலைகள் பல த.வெ.க.,வுக்கு வரவேண்டும்.

இதை பார்க்கும் மக்கள், த.வெ.க., ஜெயித்துவிடும் என்று நம்பத் தொடங்க வேண்டும். அப்போது 'மதில்மேல் பூனை' வாக்காளர்களுமே விஜய்க்கு தங்கள் ஓட்டுகளை அளிப்பர். எப்படியாவது, 30 சதவீதம் என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த இரண்டுமே நடக்கவில்லை.

விஜய், வார இறுதிகளில் மட்டுமே சினிமா ஷூட்டிங் போல வெளியில் வந்தார். எழுதி வைத்ததை படித்தார். அவருடைய கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு இருந்தது. த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் வரவில்லை. காங்கிரஸ் பேசியது.

அதை மூலதனமாக வைத்து, தி.மு.க., கூட்டணியில் மூன்று சீட்டுகளை அதிகமாக பெற்றது. அவ்வளவு தான்.

தனித்து விடப்பட்ட த.வெ.க., கட்சி மாறி கடைசி நாளன்று வந்தவர்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது. அதிலும் பெருந்தலைகள் பத்து பேர் கூட காணவில்லை. தற்போதுள்ள நிலையில், விஜய் நிற்கும் இரண்டு இடங்களில் ஒன்றிலாவது ஜெயிப்பாரா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

விஜயின் த.வெ.க., 12 முதல் 15 சதவீதம் வரை ஓட்டுகள் பெறலாம். இதன் காரணமாக, அதிகபட்சம் 2-3 தொகுதிகளை ஜெயிக்கலாம் அல்லது பூஜ்யமாகக் கூட இருக்கலாம்.

விஜயின் ஆகப்பெரிய சாதனை தி.மு.க.,வை தோற்கடிப்பதாக இருக்கலாம். தி.மு.க.,விடமிருந்து எத்தனைக்கெத்தனை ஓட்டுகளை த.வெ.க., பெறுகிறதோ, அத்தனைக்கத்தனை அ.தி.மு.க., கூட்டணி இடங்களை பெற வாய்ப்புகள் உள்ளன.

இன்றும், விஜய் தெருமுனை பிரச்சாரத்துக்கு சென்றால், கூட்டம் அதிகமாகிறது. காவல் துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சில மணி நேரத்துக்கு பின், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் அல்லது காவல் துறை அனுமதி மறுத்ததால், அவர் பனையூருக்கு சென்றுவிடுகிறார். அவரை காணவந்த கூட்டம், அவருக்கு ஓட்டுகளை அளிக்குமா என்றுகூட தெரியவில்லை.

தன் அத்தனை செல்வாக் கையும் ஓட்டுகளாக மாற்றத் தெரியாமல், செயல் திட்டத்தை உருவாக்க முடியாமல், வீழும் நிலைக்கு சென்றிருக்கிறார் விஜய்.

Advertisement