த.வெ.க.,வில் ஆளும் புதுசு... தொகுதியும் புதுசு...
மதுரை: சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள த.வெ.க.,வில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு போட்டியிட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தொகுதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போதே சத்தமில்லாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் தலைமையிலான த.வெ.க.,வில் இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. விஜய் முதல்வராவார் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன், நிர்மல்குமார், ஓ.பி.எஸ்., அணியில் இருந்து பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா, பணியை ராஜினாமா செய்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்தனர்.
இத்தேர்தலில் சென்னை பெரம்பூரில் விஜய், கோபியில் செங்கோட்டையன் , நாமக்கலில் அருண்ராஜ், மதுரையில் நிர்மல்குமார், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மகன் விவேக் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அந்தந்த மாவட்ட தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
கட்சி பொறுப்பில் உள்ள சிலருக்கு விரும்பிய தொகுதி கிடைக்காததால், குறிப்பிட்ட தொகுதியை குறிப்பிட்டு 'அங்கு நானே போட்டியிடுவதாக நினைத்து நில்லுங்கள்' என சில தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்.
அந்த தொகுதிகளில் இப்போதே அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு 'சீட்' தரப்பட்டுள்ளது.
அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், 'நான் தொகுதிக்கு புதுசு. நீங்கதான் ஏரியாவுக்கு எல்லாம் என்னை கூட்டிட்டு போகணும்' என கெஞ்சியுள்ளார். இவர் சமீபத்தில் தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வில் இணைந்தவர்.
இப்படி சில மாவட்டங்களில் ஆளும் புதுசு... தொகுதியும் புதுசு... என த.வெ.க., கலகலத்துள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்