'பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் தாமதமில்லை'
சென்னை: ''பா.ஜ., வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதமில்லை; விரைவில் வெளியாகும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். அவர் வந்ததும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்து அறிவிக்கப்படும். பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் எதுவும் இல்லை; விரைவில் வெளியாகும்.
பிரதமர் மோடி நாளை சென்னை விமான நிலையத்திற்கு வந்து, புதுச்சேரி செல்கிறார்.
மீண்டும் சென்னை வந்து தங்கிவிட்டு, மறுநாள் புறப்பட்டு செல்கிறார். சென்னையில் பா.ஜ., மையக்குழு நிர்வாகிகளை சந்திப்பார்.
பிரசார பாடல் வெளியிட்டதால் மட்டும், தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா; பாடல் வரிகளில் இருப்பது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.
நல்ல முறையில் ஆட்சி நடத்தி இருக்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாத்திருக்க வேண்டும். வெறும் பாட்டை நம்பி ஓட்டு போடுவர் என்றால், மக்களை என்ன தான் நினைத்திருக்கின்றனர்?
தி.மு.க.,வினர் தங்கள் தேர்தல் அறிக்கையை, 'ஹீரோ' என்கின்றனர்; நாங்கள் அதை, 'ஜீரோ' என்கிறோம். அவர்கள், 'ஹீரோயின்' என்கின்றனர்; நான் அதை 'ஹெராயின்' என்று சொல்கிறேன்.
தி.மு.க., ஆட்சியில் த.வெ.க., தலைவர் விஜய்க்கு மட்டுமின்றி, தனி மனிதனுக்கு கூட பாதுகாப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்