'50 இடங்களை கேட்பதற்கான முகாந்திரமே இல்லை'
மத்திய வர்த்தக துறை அமைச்சரும், பா.ஜ.,வின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 50 தொகுதிகளை பழனிசாமியிடம் அமித் ஷா கேட்டதாகவும், ஆனால், 27 இடங்கள் மட்டுமே கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறதே...
இதெல்லாம் பொய். கடந்த ஐந்து நாட்களாக பார்த்து வருகிறேன். தி.மு.க.,வின் பிரசாரம் முழுதுமே இந்த பொய் கதைகளைப் பரப்புவதிலேயே இருக்கிறது. அவர்களிடம் சொல்வதற்கு வேறு எதுவுமே இல்லை. 50 இடங்கள் பற்றி பேச்சே இல்லை. ஒவ்வொரு கட்சியும் தத்தமது பலங்களை உணர்ந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க.,விடம் 75 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
என்னிடம் நான்கு பேர் மட்டுமே இருக்கின்றனர். 50 தொகுதிகளை கேட்பதற்கான முகாந்திரமே இல்லை. 2021 தேர்தலில் 20 இடங்களை பெற்ற நிலையில், இந்த தேர்தலில் எங்களுக்கு 27 தொகுதிகள் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க., எங்களது முக்கிய கூட்டாளி. பழனிசாமி தான் எங்கள் அணியின் முதல்வர்.
இந்த 27 தொகுதிகளில், பா.ஜ., வெல்லக்கூடிய இடங்கள் குறைவாக இருக்கிறதே...
இதை நான் மறுக்கிறேன். ஏனெனில், பா.ஜ.,வின் அனைத்து தலைவர்களோடும் கலந்து ஆலோசித்து தான் இந்த இடங்களை பெற்றோம். நாங்கள் 234 தொகுதிகளை பற்றியும் விவாதித்தோம். அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., ஏற்கனவே வென்றுள்ள தொகுதிகளை அவரவர் வைத்துக்கொள்வது தானே கூட்டணி தர்மம்? மேலும் எந்தெந்த பகுதிகளில் யார் யாருக்கு பலம் இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்தோம்.
பின்னர், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மதிப்பீடு செய்தோம். அதன் பின்னரே இந்த இடங்களை தேர்வு செய்தோம். ஒருசில இடங்களில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கலாம். கூட்டணியில் எல்லாருக்கும் இப்படிப்பட்ட இடங்கள் கிடைக்கத்தான் செய்யும்.
அ.தி.மு.க.,வோடு கூட்டணி பங்கீடு முடிந்த அடுத்த நாள், சந்தோஷ் ஜி சென்னை வந்தார். அப்போது, அமித் ஷா குறித்துக் கொடுத்த 51 இடங்களில், 14 தொகுதிகளை மட்டுமே பா.ஜ., குழுவினர் பெற்று வந்ததாகவும், அதனால் அவர் மிகுந்த கோபம் அடைந்ததாகவும் சொல்லப்பட்டதே?
அந்த சந்திப்பு நடந்தபோது நான் அங்கே இல்லை. அதனால், என்னால் அதைப்பற்றி சொல்ல முடியாது. ஆனால், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், சந்தோஷ் ஜி என யாரும், இந்த தொகுதிகளைப் பற்றி எவ்விதமான புகாரும் சொல்லவில்லை.
மேலும், இந்த 51 இடங்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை. நான் தான் எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு இருந்தவன். எனக்கே இந்த 51 தொகுதிகள் பற்றி தெரியாது எனும்போது, இவையெல்லாம் தி.மு.க., பரப்பும் பொய் பிரசாரங்களின் ஒரு பகுதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
நீங்கள், 2021 தேர்தலை மனதில் வைத்து தொகுதிகளைப் பெற்றுள்ளீர்கள். ஆனால், 2024 தேர்தலில் பா.ஜ., 17 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்றுள்ள நிலையில், நீங்கள் 4:1 என்ற வீதத்தில் இடங்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லவா? அதாவது 40 தொகுதிகளேனும் பெற்றிருக்க வேண்டும் அல்லவா?
நாங்கள் எந்த அடிப்படையில் தொகுதிகளை கேட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சட்டசபைக்கு ஓட்டு போடும் போது, மாநில அரசையும் முதல்வரையும் தேர்வு செய்கிறீர்கள். இங்கே முக்கியமான கட்சி அ.தி.மு.க. ஆனால், பார்லிமென்ட் தேர்தலில் ஓட்டு போடும்போது, அங்கே அ.தி.மு.க.,வில் இருந்தோ, தி.மு.க.,வில் இருந்தோ ஒரு பிரதமர் வரப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனால், நாங்கள் 2021 தேர்தல் கணக்குகளை அடிப்படையாக வைத்துக் கொண்டோம்.
இந்த 27 தொகுதிகளிலும் நீங்கள் பழைய முகங்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளீர்கள். பல காரியகர்த்தாக்கள் காத்திருக்கும் போது, புதிய முகங்களுக்கு இடம் கொடுக்கவில்லையே?
நாங்கள் வெற்றி வாய்ப்புள்ளவர்களை மட்டுமே பார்த்தோம். அதே நேரம், சட்டசபைக்கு யாரை அனுப்ப வேண்டும், பார்லிமென்ட்டுக்கு யாரை அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானம் செய்தே, வேட்பாளர்களை தேர்வு செய்தோம். முதலில் மாநில அளவில் உருவான பட்டியல், பின்னர் தேசிய அளவிலும் சரிபார்க்கப்பட்டே வெளியிடப்பட்டது.
பா.ஜ., பெற்ற 27 தொகுதிகளையும் பழனிசாமி உங்கள் மீது திணித்துவிட்டார் என்ற எண்ணம் பா.ஜ., தொண்டர்களிடையே இருக்கிறது...
என்னென்ன தொகுதிகள் வேண்டும் என்ற பட்டியலோடு நான் போனேன். அதில் பெரும்பாலான இடங்களைப் பெற்று வந்தேன். நீங்கள் எந்த தொண்டர்களை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவர்கள் நம் பலம் என்று எதை கருதுகின்றனர் என தெரியவில்லை. ஆனால், நாங்கள் மிகச்சிறப்பான கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
மேலும் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நாங்கள் பெற்று வந்த தொகுதிகள் எல்லாம் நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளவையாக மாறி உள்ளதையும் பார்க்கிறேன். உதாரணமாக, கன்னியாகுமரியில் பெற்ற நான்கு இடங்களிலும் நாங்கள் வெற்றி பெறும் சூழல் உருவாகி உள்ளது.
தே.மு.தி.க.,வை உங்கள் கூட்டணி இழந்துவிட்டதே?
நான் அவர்களோடு பேச்சு நடத்தவில்லை. நான் பிரேமலதாவின் தேர்வை மதிக்கிறேன். ஆனால், அவரது முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர் கொள்கை ரீதியாக தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருப்பார் என்றால், அதற்கு ஒருசில மணி நேரங்கள் முன்பு வரை அவர் பேசிய பேச்சுகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. எங்களுடைய கூட்டணி கொள்கை கூட்டணி.
அதனால் எங்களுக்கு இடையே எந்தவிதமான நீண்ட பேச்சுவார்த்தையும் தேவைப்படவில்லை. கொள்கை ரீதியாக கூட்டணி அமையவில்லை எனில், அவை நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது.
நடிகர் விஜயையும் தே.ஜ., கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறதே...
தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறேன். ஓரிரு முறை அவரை தொலைக்காட்சியில் பார்த்ததை தவிர, அவரை ஒருமுறை கூட நேரில் சந்தித்ததில்லை; பேசியதில்லை. அவர் யாரென்று தெரியாது. அவரது ஒரு திரைப்படத்தைக் கூட நான் பார்த்ததில்லை. அமித் ஷா அவரை சந்திக்கவில்லை என்றும் எனக்கு தெரியும்.
இவையெல்லாம் தமிழகத்தில் இருந்து பரப்பப்படும் தி.மு.க.,வின் பொய் கதைகள். அவர்கள் தோல்வி அடையப் போகின்றனர். அதனால், அவர்கள் இதுபோன்ற பொய் கதைகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தையும் செங்கோட்டையனையும் கூட்டணிக்குள் பா.ஜ., அழைத்து வரும் என்று சொல்லப்பட்டதே, என்ன ஆயிற்று?
நான் அவர்களை அழைத்து வரும் முயற்சியில் இறங்கவில்லை. பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா காலத்தில் இருந்தே எனக்கு தெரியும்.
ஆனால், அவ்வளவு அணுக்கமான தொண்டர் ஒருவர், 'அம்மா'வால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர், இப்போது வாழ்க்கையின் அத்தனை கொள்கைகளையும் கைகழுவி விட்டு, தி.மு.க.,வில் போய் சேர்ந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. அவரும் அவரது மகனும் தவறு செய்துவிட்டனரா, இல்லையா என்பதை அவர்களது ஆதரவாளர்களே தீர்மானிப்பர்.
அண்ணாமலையை இந்த தேர்தலில் போட்டியிட வைக்க, நீங்கள் ஏன் சமாதானப்படுத்த முயலவில்லை?
இதில், யாரும் யாரையும் சமாதானப்படுத்த முடியாது. நாங்கள் எல்லாரும் கட்சியின் தொண்டர்கள். எங்களை, எங்கே எப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முடிவை கட்சி எடுக்கும்.
கட்சி என்னை ராஜ்யசபா எம்.பி.,யாக்கிய போது, என் வயது 46. ஆனால், நான் சிறுபிள்ளையாக இருந்த போதிலிருந்தே கட்சியில் தான் இருக்கிறேன்.
அதனால், கட்சி தான் யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும். நாங்கள் மக்கள் பணி ஆற்ற வேண்டுமா, சட்டசபை, பார்லிமென்டுக்கு போக வேண்டுமா என்பதையும் கட்சியே தீர்மானிக்கும். இதில், எங்கள் கருத்து ஒன்றும் இல்லை. இதில், யாரும் யாரையும் சமாதானப்படுத்த வேண்டும் என்பதும் இல்லை. நாங்கள் மக்கள் பணியாற்ற வந்திருக்கிறோமே அன்றி, எம்.எல்.ஏ., - எம்.பி., ஆவது எங்கள் நோக்கம் அல்ல.
சமீபத்தில் பிரசாரம் மேற்கொள்ள புதுச்சேரி வந்த பிரதமர், சென்னையில் தங்கினார். ஆனால், அவரை முன்னிலைப்படுத்தி ஒரு ரோடு ஷோவோ, பிரசாரமோ இங்கே ஏற்பாடு செய்யப்படவில்லையே?
அத்தகைய திட்டமே இல்லையே? அப்போது பா.ஜ., வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை. தேர்தல் பிரசாரமே இங்கு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் எப்படி இங்கே ஒரு கூட்டம் நடத்த முடியும்? அவர் ஏற்கனவே தமிழகத்தில் மூன்று பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அன்று அவர் புதுச்சேரிக்கு வந்துவிட்டு, பின்னர் கேரளா செல்லவிருந்தார். அவர் இங்கே வெறுமனே தங்கிவிட்டுத்தான் போனார். ஆனால், வழக்கம்போல் இங்கே ஏராளமான பொய் கதைகள் கட்டப்பட்டு விட்டன.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனவே. அவற்றால், தமிழக மக்கள் தலைமீது கடன் சுமை ஏற்றப்படாதா?
தி.மு.க., நடத்துவது போன்ற ஒரு மோசமான அரசு நடத்தப்படுமானால், நிச்சயம் வளர்ச்சிப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. இங்கே, நிதி பற்றாக்குறை இருக்கிறது; கடன்சுமை அதிகமாக இருக்கிறது. கடன் வாங்குவது தவறு இல்லை. அர்த்தமற்ற செலவினங்களை செய்வதற்காக கடன் வாங்கப்படுமானால், அது தான் பிரச்னைக்குரியது.
மூலதன முதலீடுகளை செய்வதற்காக கடன் வாங்கப்படுமானால், அது நல்லது. நாங்கள் மத்திய அரசிலும் கடன் வாங்குகிறோம். அதை உள்கட்டுமானங்களில் முதலீடு செய்கிறோம்.
மக்களின் எதிர்கால நலனுக்காக வாங்கப்படும் கடன், நல்லது. சம்பளம் கொடுக்கவும், நலத்திட்ட உதவிகளை செய்யவும் கடன் வாங்கப்படுமானால், அது மாநிலத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும்.
நாங்கள் உத்தர பிரதேசத்தில் என்ன செய்தோமோ, அதையே இங்கேயும் செய்வோம். நான் அப்போது அங்கே பணியாற்றினேன். தேர்தல் அறிக்கையை தயார் செய்தோம். கடைசியில் எவ்வளவு செலவு ஆகிறது என்று கணக்கு போட்டோம். மிகப்பெரிய தொகை வந்தது. நான் அசந்து போனேன். அமித் ஷாவிடன் பேசினேன்.
அப்போது அவர் ஒரே ஒரு விஷயம் சொன்னார், 'பீயூஷ், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று விஷயங்களை செய்ய வேண்டும். நில மாபியாவை ஒழிக்க வேண்டும், மது மாபியாவை அடக்க வேண்டும், மணல் மாபியாவை தடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்குப் பணப்பிரச்னையே வராது' என்றார்.
இன்று உத்தர பிரதேசத்தைப் பாருங்கள். மதுவால் மட்டும் இப்போது, சமாஜ்வாதி ஆட்சியில் வந்ததை விட ஐந்து மடங்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இதற்கு, உ.பி., மக்கள் ஐந்து மடங்கு அதிகம் குடிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று அர்த்தமில்லை. நேர்மையான அரசு நடத்தினால், வருவாய் ஒரு பிரச்னையே இல்லை..
Advertisement
ஈ லோகத்தில் தன்னுடைய கட்சி நாசமா போனாலும் பரவாயில்லை... பலவீனமான அதிமுக கட்சியை பலப்படுத்தணும்னு பாடுபடுற ஒரு கட்சி உண்டெங்கில் அது பாஜக தான் சாரே...
ஆஹா ஓஹோ நீங்கள் கூட்டணி அமைத்த ராஜ தந்திரத்தின் படி முகாந்திரத்தை தேடினால் 2031 தேர்தலில் ஐந்து தொகுதிகள் கேட்பதற்கு கூட அவசியமில்லாமல் போயிடுமே
உங்கள் நிருபர் கேள்விகள் எல்லாம் நன்றாக தான் கேட்டுள்ளார். பதில்கள் எல்லாம் நழுவல் தான். அதனால் பேட்டியே வீணாகி விட்டது.

அப்படி என்றால் தமிழகத்தில் பாஜக பலவீனமான கட்சியாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறாரா?