குளுகுளு பிரதேசங்களுக்கு சுற்றுலா; தலைவர்கள் திட்டம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், 'டூர் பிளான்' போடத் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர் தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது. உடனே, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரங்களில் தலைவர்கள் இறங்கினர்.
சோர்வு
மார்ச் 31ம் தேதி, திருவாரூரில் இருந்து பிரசாரத்தை துவக்கிய முதல்வர் ஸ்டாலின், தொடர்ச்சியாக 22 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். முன்னதாக, அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த, முதல்வர் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்தார்.
அதேபோல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சென்னை மயிலாப்பூரில் மார்ச் 25ம் தேதி பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, 27 நாட்கள் பிரசாரம் செய்த பழனிசாமி, எல்லா மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளார்.
நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக, 90 நாட்களுக்கு மேல் பிரசார பயணத்தை முடித்திருக்கிறார்; தேர்தல் அறிவிப்புக்கு பின், 234 தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
துணை முதல்வர் உதயநிதி, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ச்சியாக பிரசாரம் செய்துள்ளனர். இவர்கள் தவிர, களத்தில் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், தொகுதியை சுற்றி வந்து தீவிர பிரசாரம் செய்துள்ளனர். தலைவர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் என பலரும் சோர்வடைந்துள்ளனர்.
முன்பதிவு
இதனால், இன்று ஓட்டுப்பதிவு முடிந்ததும், பலரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும், ஓட்டு எண்ணிக்கைக்கு ஓரிரு நாள் முன்னதாக தொகுதிகளுக்கு திரும்பவும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி ஆகியோர் ஊட்டி அல்லது கொடைக்கானல் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதேபோல், உதயநிதி தன் குடும்பத்தோடு ஐரோப்பா நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய் பெரிய அளவில் பிரசார பயணங்கள் செல்லவில்லை. இருப்பினும், கோடை காலத்தில் வெளிநாடு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் அவர், தன் நண்பர்களுடன் இம்முறை நெதர்லாந்து அல்லது கனடா செல்ல திட்டமிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தலில் ஓட்டளித்த கையோடு, நீண்ட நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்களை போலவே, கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பணி செய்த களைப்பில் உள்ளனர். எனவே, அவர்களும் குளிர் பிரதேசங்களுக்கு செல்ல, 'புக்' செய்து வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற இடங்களிலும், வட மாநிலங்களில் உள்ள குளிர் பிரதேசங்களிலும், அடுத்த 10 நாட்களுக்கு தமிழக அரசியல் புள்ளிகள் தான் நிறைந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்