Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'கூட்டாட்சியையும் கூட்டணி ஆட்சியையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்'

'கூட்டாட்சியையும் கூட்டணி ஆட்சியையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்'

தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், ராஜ்யசபா தி.மு.க., குழு தலைவருமான திருச்சி சிவா எம்.பி., நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் முரண்டு பிடித்தபோது, டில்லியை மையமாக வைத்து அரசியல் செய்யும் நீங்கள் தான் அதை சரிசெய்தீர்களா?


தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சுக்குழுவும், காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுக்குழுவும் பேசியதை, முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அவர் தான் தலையிட்டு தீர்வு காண்பதற்குரிய முடிவை சொல்லி சரிசெய்தார்.

டில்லியில், காங்கிரசை விட பா.ஜ.,வில் தான் உங்களுக்கு அதிக நண்பர்கள் என்கின்றனர். உண்மையா?


என்னைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளத் தெரியாதவர்கள் அப்படி சொல்லியிருப்பர். என் வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியின் விருந்தில், காங்கிரஸ், பா.ஜ., சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என சர்வ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று சிறப்பிப்பர். சர்வ கட்சி தலைவர்கள் வந்து செல்லும் வீடு; நட்பு தொடரும் வீடு என, வட மாநில தலைவர்கள் அழைப்பர். முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நட்டா, கார்கே, ராகுல் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் எல்லாம், எங்கள் வீட்டில் தயார் செய்யப்படும் தென் மாநில உணவுகளை விரும்பி சாப்பிடுவர்.

நட்டாவுக்கு, இட்லி - சாம்பார் ரொம்ப பிடிக்கும். என் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருந்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும்போது, நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, விரும்பி சாப்பிடுவோம். அதில் பத்திரிகையாளர்களும் பங்கேற்று, அரசியல் பற்றி விவாதிப்போம்.

மத்தியில் கூட்டாட்சியை வலியுறுத்தும் தி.மு.க., மாநிலத்தில் கூட்டணி கட்சிகளை ஆட்சியில் சேர்க்க மறுக்கிறது. இது போலித்தனம் இல்லையா?


கூட்டாட்சி வேறு; கூட்டணி ஆட்சி வேறு. 'மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' என்பது தி.மு.க.,வின் கொள்கை. கூட்டாட்சி தத்துவம் என்பது, மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து நடத்துகிற ஆட்சி முடிவு. கூட்டாட்சியையும் கூட்டணி ஆட்சியையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

தி.மு.க., ஆட்சி ஹிந்து விரோத ஆட்சி என்று பிரதமரும், அமித் ஷாவும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், அதற்கு தி.மு.க., தரப்பில் சரியான பதில் இல்லையே...


தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 10,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் திருவிழாக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. பழங்கால கோவில்கள் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளன. ஒருகால பூஜை நடக்கும் கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை தரப்படுகிறது. அனைத்து ஹிந்து மக்களும் தி.மு.க., அரசை பாராட்டி வருகின்றனர். எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை. ஜாதி, மதம் பேதமற்ற சமத்துவ சமுதாயம் தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடைசியாக லோக்சபா தேர்தலில், எப்போது போட்டியிட்டீர்கள்? அதன்பின் ஏன் போட்டியிடவில்லை?


கடந்த 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், புதுக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதன்பின் நடந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என, எதுவும் நான் கேட்டதில்லை. கருணாநிதியும், முதல்வர் ஸ்டாலினும் நான் கேட்காமல் கொடுத்தனர்.

இதோடு, ஆறாவது முறையாக பார்லிமென்டில் பதவி கிடைத்திருக்கிறது. அந்த பதவியை பயன்படுத்தி, தமிழகத்திற்காக நீங்கள் செய்த மூன்று முக்கிய விஷயங்கள் எவை?


சேலத்தில், நலிந்து போன மேக்னசைட் தொழிற்சாலையை மத்திய அரசு தனியாரிடம் கொடுக்க முயன்றபோது, அதை தடுத்து நிறுத்தி 80 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் வகையில், தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டேன். தொழிலாளர்களின் ஊதிய உயர்வை அதிகரித்து தருவதற்கு குரல் கொடுத்தேன்.

தமிழகத்தில் முதல் முறையாக, திருச்சி ரயில் நிலையத்தில், ஒரு கோடி ரூபாயில், 'எஸ்கலேட்டர்' அமைத்து கொடுக்கப்பட்டது. திருக்குறளை தேசிய நுாலாக்க குரல் கொடுத்தேன். உலகத்தில் உள்ள தொன்மையான இடங்களின் வரிசையில், கல்லணையை கொண்டு வர பரிந்துரைத்தேன். கருணாநிதி கொண்டு வந்த திருநங்கையருக்கான திட்டம், இந்தியா முழுதும் பயனளிக்கும் வகையில், தனிநபர் மசோதாவாக, திருநங்கையர் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர்களுக்கு மலைவாழ் மக்கள் அந்தஸ்து வழங்க வேண்டும் என குரல் கொடுத்தேன்.

ரயில்வே திட்டங்கள் மற்றும் விமான நிலைய திட்டங்களில், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகம் பின்தங்கி வருகிறது. இதை சரிசெய்ய ஏதேனும் முயற்சி எடுத்துள்ளீர்களா?


தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களை, சர்வதேச விமான நிலையங்களாக மேம்படுத்த வேண்டும். பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்களை கொண்டு வர, முதல்வர் ஸ்டாலின் சொல்லி, தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டோம். எங்களது ஒருமித்த குரல் ஓயவில்லை. தொடர்ந்து குரல் கொடுப்போம்.

ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ராஜ்யசபாவில் பேசிய நீங்கள், மதுரை எய்ம்ஸ் குறித்து எதுவுமே பேசாதது ஏன்?


கேள்வி நேரம், விவாதத்தின் போது, மற்ற மாநிலத்தில் எய்ம்ஸ் திட்டங்கள் வேகமாக நிறைவேறும் போது, தமிழகத்தில் ஏன் இன்னும் வேகம் பெறவில்லை என பேசியிருக்கிறேன். கடந்த 2015ல் அறிவிக்கப்பட்ட திட்டம், இன்னும் முழுமை பெறாமல் இருப்பது, தமிழக மக்களின் நலன்கள் மீது மத்திய அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, நியாயமான முறையில் குரல் கொடுத்துள்ளோம். எந்நாளும் தமிழக மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க தவறியதில்லை.

எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை நடத்த விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதை, பார்லிமென்ட் மூத்த அரசியல்வாதியான நீங்கள் கண்டிக்காமல், ஆதரித்தும் பேசியுள்ளீர்கள். ஏன்?


பார்லிமென்டை நடத்தவிடாமல் இடையூறு செய்வதாக, வெளியே தவறாக சித்தரிக்கப்படுகிறது. நாங்கள் ஒரு பிரச்னை குறித்து, குறிப்பாக மணிப்பூர் கலவரம் மற்றும் மாநில உரிமைகள் பறிக்கப்படும் போது, எதிர்க்கட்சிகள் பேசினால் அதை அனுமதிக்க வேண்டும்; அனுமதி மறுக்கப்படுகிறது. அரசு பதில் சொல்ல முன்வரவில்லை என்றால், விளக்கம் தரவில்லை என்றால், பார்லிமென்டில் விவாதிப்பதற்கு வழி இல்லை.

அதை எதிர்த்து, ஜனநாயக முறையில் குரல் கொடுத்தால், ஆர்ப்பாட்டம் செய்வதாகக் கருதி, அவையை ஒத்திவைத்து, பழியை எங்கள் மீது போடுவதால் வெளியே உள்ளவர்கள் எங்களை தவறாக நினைப்பது வாடிக்கையாகி விட்டது .

மத்தியில் இருந்து நிதி தரவில்லை, வரவில்லை என தமிழக அரசு தொடர்ந்து புலம்புகிறது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில், நீங்கள் எந்த அமைச்சரிடமாவது பேசியதுண்டா? அவர்கள் சொல்வதென்ன?


புலம்பவில்லை; ஆதங்கப்படுகிறோம், முறையிடுகிறோம். முதல்வர் சொல்லி அனுப்பும் கோரிக்கை குறித்து, மத்திய நிதி அமைச்சரை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ரயில்வே அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சரை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பலமுறை சந்தித்து, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டிருக்கிறோம்.

தமிழக அரசின் கடன், 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பது குறித்து டில்லியில் என்ன பேசிக்கொள்கின்றனர்?


பத்து லட்சம் கோடி ரூபாய் என்பது உண்மையல்ல. கடன் தொகை, 9.29 லட்சம் கோடி ரூபாய் தான். மாநில அரசின் மொத்த நிகர வருமானத்தில் 26.12 சதவீதம். கடன் வாங்கிக் கொள்வதற்குரிய வரம்பை, தி.மு.க., அரசு தாண்டவில்லை. ஆனால், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, இந்தியாவின் கடன் தொகை, 55.87 லட்சம் கோடி ரூபாய். இன்று, பிரதமர் மோடி அரசின் கடன், 214.82 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த வித்தியாசம் யார் கண்ணிற்கும் ஏன் தெரியவில்லை.

வெளியுறவு கொள்கையில் மத்திய அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?


பஹல்காம் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் பேசியது உட்பட பல விவகாரங்களில், மத்திய அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. திருப்தி தரும் வகையிலும் இல்லை. அதேசமயம் கொள்கையை நான் விமர்சிக்கவில்லை. வெளியுறவு கொள்கை தொடர்பாக, பார்லிமென்டில் எதிர்க்கட்சி கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு உரிய பதிலளிக்கவில்லை.

தி.மு.க.,வில் கொள்கை பரப்பு செயலர் பதவியிலிருந்து, துணைப் பொதுச்செயலர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளீர்கள். இது உங்களுக்கு ஜாதிய பின்புலத்தால் மட்டுமே கிடைத்தது என்று தி.மு.க.,விலேயே சிலர் விமர்சிக்கின்றனரே...


நிச்சயமாக இல்லை. ஜாதியை நான் முன்னிலைப்படுத்தியதில்லை. பல ஆண்டுகளாக நான் பழகுபவர்களின் ஜாதி என்ன என்பதும் எனக்கு தெரியாது. அவர்களிடம் என் ஜாதி குறித்து சொன்னதும் கிடையாது. யாருடைய ஜாதியையும் தெரிந்துகொள்ள நான் முற்பட்டதில்லை. ஜாதி அரசியல் எனக்கு தெரியாது. கட்சிக்கு கடினமாக உழைத்தது, தியாகம் செய்தது, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் எனக்கு கிடைத்த அங்கீகாரம் தான் கட்சியின் துணை பொதுச்செயலர் பதவி. மற்றபடி ஜாதி பின்புலத்தில் எனக்கு பதவி தரவில்லை. அப்படி விமர்சிப்பவர்கள் குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. என்னை புரிந்தவர்களுக்கு, என்னைப் பற்றி நன்றாக தெரியும். நான் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன்.

Advertisement