Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தி.மு.க., அமைச்சர்களுடன் 'அண்டர் டீலிங்': த.மா.கா., தொகுதிகளால் அ.தி.மு.க.,வில் கொதிப்பு

தி.மு.க., அமைச்சர்களுடன் 'அண்டர் டீலிங்': த.மா.கா., தொகுதிகளால் அ.தி.மு.க.,வில் கொதிப்பு

- நமது நிருபர் -
தி.மு.க., அமைச்சர்களின் வெற்றிக்கு உதவும் விதமாக, த.மா.கா.,வுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொகுதிகளை ஒதுக்கியதாக அ.தி.மு.க., நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தே.ஜ., கூட்டணியில், வாசன் தலைமையிலான த.மா.கா.,வுக்கு ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் ஆகிய, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ.,வாக தி.மு.க., அமைச்சர் காந்தி உள்ளார்.

அங்கு அ.தி.மு.க., மாவட்ட செயலராக உள்ள சுகுமார், காங்கிரசில் இருந்தபோது, காந்திக்கு தலைமை பூத் ஏஜன்டாக இருந்தவர். எனவே, காந்தியை எதிர்த்து போட்டியிட மறுத்த சுகுமார், பழனிசாமியுடன் பேசி, ராணிப்பேட்டையை த.மா.கா.,வுக்கு தள்ளிவிட்டு விட்டார்.

அதேபோல், ஈரோடு மேற்கு தொகுதியை சேர்ந்த அமைச்சர் முத்துசாமியும் பழனிசாமியும் மிகவும் நெருக்கம்; இருவரும் துாரத்து உறவினர். முத்துசாமியை எதிர்த்து, ஒரு அறிக்கை கூட, பழனிசாமி வெளியிட்டது இல்லை. தற்போது, முத்துசாமிக்கு எதிராக அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தாமல், தொகுதியை த.மா.கா.,வுக்கு கொடுத்திருக்கிறார்.

இதுபோல, தி.மு.க., அமைச்சர் சக்கரபாணியுடன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, மிகவும் நெருக்கமாக இருக்கிறார். கடந்த ஆண்டு, வேலுமணி இல்ல திருமண விழாவுக்கு சத்தமில்லாமல் வந்து போனார் சக்கரபாணி.

தற்போது, சக்கரபாணியின் வெற்றியை உறுதி செய்ய, பழனிசாமி வாயிலாக ஒட்டன்சத்திரம் தொகுதியை த.மா.கா.,வுக்கு தள்ளி விட்டு, வேலுமணி தன் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

ஜெயலலிதா இருந்தபோது, தி.மு.க.,வை சேர்ந்த பெரியசாமியுடன், அ.தி.மு.க.,வை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் நெருக்கமாக இருப்பதாக, உளவு தகவல் வந்தது. இதனால், டென்ஷனான ஜெயலலிதா, அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனை, பெரியசாமிக்கு எதிராக ஆத்துார் தொகுதியில் போட்டியிட வைத்தார்.

தி.மு.க.,வுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் வந்தாலே, அவர்களை ஜெயலலிதா துாக்கியடித்தார். ஆனால், இன்று தி.மு.க., அமைச்சர்களின் வெற்றிக்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியே உதவுவது ஆபத்தானது. தி.மு.க., அமைச்சர்களுக்கு ஆதரவாக, பழனிசாமி செயல்படுவது சரியல்ல. இது தெரியாமல், ஐந்து 'சீட்' வாங்கி விட்டோம் என, த.மா.கா.,வினர் சந்தோஷப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சீமான் வழியில் வாசன்?



புதிதாக கட்சி துவங்கிய சசிகலா கூட, தனி சின்னத்தில் போட்டியிடும்போது, பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிட, த.மா.கா., தலைவர் வாசன் முடிவெடுத்துள்ளார். அவரது கட்சிக்கு ஒதுக்கிய கும்பகோணம் தொகுதியில், 2011 முதல் தி.மு.க., தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.,வின் கோட்டையாக, இத்தொகுதி கருதப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியில், 1996 மற்றும் 2001 தேர்தல்களில், த.மா.கா., வெற்றி பெற்றது. அதன் பின், தொடர்ந்து நான்கு தேர்தலிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இப்படி தொடர் வெற்றிகளுடன், தி.மு.க., - காங்கிரஸ் பலமான தொகுதிகளில், த.மா.கா., போட்டியிடுகிறது.

கடந்த பல தேர்தல்களில், தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ஜெயித்தால் முயற்சி; தோற்றால் பயிற்சி' என, அடிக்கடி கூறுவார். அவர் வழியிலேயே, அந்த வார்த்தைகளை பின்பற்றி, ஐந்து தொகுதிகளில் வாசனும் களமிறங்குகிறாரோ என அரசியல் வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.

Advertisement