Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பெண்களுக்கு மாதம் ரூ.2,500; இலவச காஸ் சிலிண்டர்: விஜய் வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.2,500; இலவச காஸ் சிலிண்டர்: விஜய் வாக்குறுதி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சென்னை: 60 வயது வரையுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது. விஜய் பிரசாரத்தின் போது தவெக சார்பில் பல வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டார். இதனை விவசாயி, ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற எஸ்பி அமிர்தலிங்கம், மீனவர் ஒருவர் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் பேசியதாவது:

திருக்குறளின்படி


தமிழகத்தின் முதல் பெருமைதமிழ் மொழி. தமிழின் முதல் பெருமை திருக்குறள். திருக்குறளும் நமது வழிகாட்டி. திருக்குறள் கூறிய அறம், பொருள், இன்பத்தை அடிப்படையாக வைத்து தேர்தல் வாக்குறுதிகள் இருக்கும். திருக்குறள் கூறிய அறம், பொருள் , இன்பம் எனக்கூறியுள்ளது.

அறம் என்றால் தூய்மையான மனதோடு சேவை செய்தால், நேர்மை என எடுத்துக்கொள்ளலாம். இது அரசுக்கு இருக்க வேண்டிய திறன்.
பொருள் என்றால், தனி மனிதன் மட்டும் தேட வேண்டிய பொருள் என அர்த்தம் மட்டும் இல்லை. அரசியல், ஆட்சிமுறை , கல்வி வேளாண்மை, வாழ்க்கை முறைக்கு தேவையானதை தேட வேண்டிய பொருள்.
இன்பம் என்றால் மகிழ்ச்சி என சொல்லலாம். ஆனால், அது எப்படிப்பட்ட என்பது இன்பம், களங்காத மன உறுதி , அறிவு தேடல் நேர்மையான உழைப்பு மூலம் வருவதை நிஜமான இன்பம்
அறம் பொருள் இன்பம் மூன்றுக்கு பின்னாலும், நல்ல மனதும் உழைப்பும் நேர்மையும் பொதுவாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். இது அரசியலுக்கும், ஆட்சி அதிகாரத்துக்கும் அதிகாரம்.

நேர்மையை அரசியல் சித்தாந்தமாக எடுத்துக் கொண்டது தவெக. இதனால் தான் தவெகவின் முதல் தேர்தல் அறிக்கை கூட நேர்மையான உத்தரவாதம். ஸ்டாலின் சார் போன்று ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அள்ளிவிடும் அவசர அறிக்கை இல்லை.

இரண்டும் ஒன்று

திமுகவும் மற்றும் பலரும் ஒன்று தான் என நாம் கூறினோம். அதற்கான காரணம் ஒன்றை சொல்கிறேன். அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஒன்று இரண்டு ஒரே மாதிரி இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒருவர் 10 ஆயிரம் கொடுத்தால்,மற்றொருவர் 8 ஆயிரம் கூப்பன் கொடுக்கிறார். ஒருத்தர் பிரிஜ் கொடுத்தால், இன்னொருத்தர் பிரிஜ் வாங்க டோக்கன் கொடுக்கிறார்.
2 பேருமே மீனவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர்.இப்படி இரண்டு பேரும் தேர்தல் அறிக்கையை பெயர், நிறத்தை மாற்றி தந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் வேறு வேறு இல்லை. ஒரு குடையின் கீழ் இருக்கும் கொள்கை கூட்டம் தான்.

ஆனால், இந்த இரண்டு ஊழல் கூட்டம் போன்று நாம் ஏமாற்ற மாட்டோம். நமக்கு மக்கள் தான் முக்கியம். அவர்கள் மனது தான் முக்கியம். அவர்கள் வாழ்க்கை தான் முக்கியம். என்னவெல்லாம் செய்ய முடியுமோ எதுவெல்லாம் சாத்தியமோ, செயல்படுத்த முடியுமோ அதனை மட்டும் சொல்லி உள்ளோம். ஆட்சிக்கு வந்த பறிகு சொல்லாததை செய்வோம். இப்போது செய்ய முடிந்தது தான் சொல்லி உள்ளோம்.
தேர்தல் அறிக்கையில் முக்கியமான 10 அம்சங்கள்.

01. ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் மிக்கவர் என்பதை பறை சாற்ற வெற்றி மகளிர் திட்டங்கள்.

* 60 வயதுக்கு உட்பட்ட குடும்ப தலைவியின் வங்கிக்கணக்கில் மாதம் 2,500 ரூபாய்
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் 6 இலவச காஸ் சிலிண்டர்கள்
*ஏழை குடும்பங்களை சேர்ந்த ஏழை பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் தரமான பட்டு சேலை
* 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் தாய் மற்றும் பாதுகாவலருக்கு இடைநிற்றலை தவிர்க்க ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்
*பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள்

2. உலக தரம் வாய்ந்த கல்விக்கான உத்தவராதம்

* அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12 வரை தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிட பள்ளிகள்.
* ஒவ்வொரு பள்ளியிலும் நவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி
*ஒவ்வொரு தமிழ் மாணவரின் கல்வி கனவுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் இளங்கலை பட்டம் முதல் முனைவர் பட்டம் வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் உத்தரவாதம்
*எதிர்கால திறன் பயிற்சி மையங்கள் மற்றும் ஏஐ மூலம் இயங்கும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி

3. மக்கள் நலம் பேணும் சுகாதார உத்தரவாதம்

*போதைப்பொருள் இல்லா தமிழகம்
*பள்ளி கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மன்றங்கள்.
*ஒரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான யுனிவர்சல் சுகாதார காப்பீடு. அதில் புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது.
*ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை மற்றும் அனைவருக்கும் மலிவு விலை மருந்துகள் வழங்குதல்

4. இளைஞர்களுக்கு ஏணிப்படிகளாக இருக்கும் உத்தரவாத திட்டங்கள்

*வேலைவாய்ப்பு பதிவு செய்தவர்களில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.4 ஆயிரம்,
*பிளஸ் 2 ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும்
*ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் பயிற்சியின் போது பட்டதாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம்
*தொழில் முனைவோராக விரும்பும் இளைஞருக்கு தொழில் முனைவோருக்கான ரூ.2 5 லட்சம் பிணையில்லா கடன் உத்தரவாதம்
*ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம்
*அரசு தேர்வுகளுக்கான நிலையான ஆட்சேர்ப்பு அட்டவணை உருவாக்கப்பட்டு, அதை முறையாக அமல்படுத்துவதோடு, அரசு பணிகளில் காலி பணியிடங்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

5. உழவர்கள் உள்ளம் மகிழும் திட்டங்கள்

*5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்குள் வேளாண் சங்கங்களில் இருந்து வாங்கும் பயிர்கடன்கள் முழு தள்ளுபடி செய்யப்படும்
*5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெறும் பயிர்கடன்களுக்கு 50 ச தவீதம் தள்ளுபடி
*நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்பு டன்னுக்கு ரூ.4,500
*தென்னை விவசாயிகளுக்கு கொப்பரை தேங்காய் விலை நிலைப்படுத்துதல்
*குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்
*5 லட்சம் இலவச சோலார் பம்ப் செட்கள் மற்றும் 100 சதவீதம் பயிர் காப்பீடு

6. மீனவர் நலன் காக்கும் மேம்பாட்டு திட்டங்கள்

*ஒவ்வொரு மீனவர் குடும்பத்துக்கும் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக உதவியாக ரூ.27 ஆயிரம்
*பதிவு செய்யப்பட்டஒவ்வொரு மீனவருக்கும் ரூ.25 லட்சம் விபத்து காப்பீடு
*இந்தியாவில் முதன்முதலாக மீன்களுக்கு சட்டபடி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம். மத்தி, கானாங்கெழுத்தி,இறால், கணவாய் உள்ளடக்கியது.
*அனைத்து மீனவர்களுக்கும் வீடுகள் கட்டிதரப்படும் லட்சிய திட்டம்

7. மக்கள் உரிமை கண்ணியமான வாழ்க்கை சமூக பாதுகாப்பு உத்தரவாதம்

*விதவை, முதியோர்,மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்
*ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்கள் இலவச மின்சாரம்
* வருட கணக்கில் சட்டப்பூர்வமான மின்இணைப்பு, வீட்டு வரி ஆவணங்களுடன் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா முறைப்படுத்துதல்
*அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் வசதி

8. அரசு ஊழியர்கள் நல உத்தரவாதம்

*சட்டப்படி பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனை மற்றும் மறுசீரமைப்பு
*5 அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவ ஒப்பந்த பணியாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள், ஒப்பந்த நர்சுகள் முறைப்படுத்துதல்
*அங்கன்வாடி ஊழியர்கள் சம்பளத்தை ரூ.18 ஆயிரமாகவும்,
*சமூக சுகாதார உதவியாளர் சம்பளத்தை ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்துதல்
*20 வருட சேவைக்கு பிறகு ரூ.15 லட்ச கருணை உதவித்தொகை உத்தரவாதம்
*ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு சேவைக்கு பிறகு சம ஊதியம், தாமாகவே பணி நிரந்தரம் ஆகுதுல்

9. தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்

*தமிழக வளர்ச்சிக்கான பொற்காலம் என்ற நோக்கில் 2036க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரம்.
*குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 15 ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதி, மின்கட்டண நிவாரணம் மற்றும் ரூ.50 லட்சம் வரையிலான மேம்பாட்டு நிதி
*அனைத்து பகுதிகளிலும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரத்யேகமான மாஸ்டர் பிளான்.
*இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு பல்கலை, செயற்கை நுண்ணறிவு நகரம் ஆகியவை தமிழகத்தில் அமைத்து இந்தியாவின் தலைநகராக மாற்றும்.
*அனைத்து முதலீட்டாளர்களாலும் மிகவும் விரும்பப்படும் முதலீட்டு இடமாக தமிழகம் மாறும். 21 நாட்களுக்குள் வணிக உரிமம் உத்தரவாதம், தமிழ் புலம்பெயர் முதலீட்டிற்கான தனி சிறப்புக் கொள்கை

10.நேர்மையான நல்லாட்சிக்கான உத்தரவாதம்

*ரேஷன் வீட்டிற்கு வழங்குதல்,
*எக்காரணம் கொண்டு சொல்லி யாரையும் விலக்காத உத்தரவாதம்
*ஒவ்வொரு அரசு சேவையும், சாதி சான்றிதழ், நிலப்பட்டா, பிறப்பு சான்றிதழ் ஆகியவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளித்தல்
*லஞ்சம் லாவண்யம் அற்ற ஆட்சி
*மக்களால் நேரடியாக எழுப்பப்படும் பிரச்னைகளை விவாதிக்க சட்டசபையில் ஒரு நாள் ஒதுக்கப்படும்
*மாவட்டத்தின் செலவினங்களை 10 சதவீதம் மக்கள் விருப்ப்பபடி தயாரித்தல்.

இவ்வாறு விஜய் கூறினார்.

நேரலை

தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி தினமலர் சமூக வலைதள பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.அதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Advertisement