பணத்திற்கு விலை போகாத ஓட்டுகள்; நிரூபித்த மக்கள்
சென்னை: ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை, தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்து உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., இடையே நான்கு முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க.,வினருக்கு, அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தர விட்டிருந்தார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி திட்டமிட்டார். எனவே, இந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் ஓட்டுக்கு தலா, 1,000 ரூபாய் முதல், 2,500 ரூபாய் வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.
காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் தலா, 1,000 ரூபாயை தி.மு.க.,வினர் வழங்கினர்.
அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தலா, 1,000 ரூபாய் முதல், 2,500 ரூபாயும், பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், அதே அளவுக்கு பணமும் பட்டுவாடா செய்யப்பட்டது.
த.வெ.க., - நா.த.க., கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் பிரசாரத்திற்கே பணமின்றி சிரமப்பட்டனர்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்தலுக்கு பணத்தை வாரி இரைத்த தி.மு.க., ஆட்சியை இழந்த நிலையில், அ.தி.மு.க.,வாலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று, த.வெ.க., ஆட்சியை பிடித்துள்ளது.
இதுகுறித்து, வாக்காளர்கள் கூறுகையில், 'ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை, தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது. எனவே, இனி தேர்தலுக்கு பணம் கொடுக்க கூடாது என்ற எண்ணம் கட்சிகளிடம் வர வேண்டும்' என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்