நாங்கள் எதற்கு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை: பா.ஜ., தலைமை மீது மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
சென்னை: 'நாங்கள் கட்சியில் எதற்கு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. கட்சித் தலைமை எங்களை மதிப்பதே இல்லை' என, பா.ஜ., மாவட்டத் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வரும் 30ம் தேதி, வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. அதற்கு முன்பு, அ.தி.மு.க.,வுடன் தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டு, பா.ஜ., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.
இந்நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம், யார் யாரை வேட்பாளராக நிறுத்தலாம், தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறலாம், எப்படியெல்லாம் தேர்தல் பணிகளை மேற்கொள்ளலாம் என, சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக, மாவட்டத் தலைவர்களிடம், தமிழக பா.ஜ., தலைவர், பொதுச்செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என, மாவட்டத் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பா.ஜ., மாவட்டத் தலைவர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக பா.ஜ.,வில், 67 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். தேசிய தலைமையோ, மாநிலத் தலைமையோ, என்ன முடிவெடுத்தாலும், அதை செயல்படுத்தப் போவது மாவட்டத் தலைவர்கள்தான். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், கட்சியின் பலம், பலவீனம், யார் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதெல்லாம், மாவட்டத் தலைவர்களுக்கு தான் தெரியும்.
அதனால்தான் தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகளே, மாவட்டச் செயலர்களின் ஆலோசனைகளைப் பெற்றுதான், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் செய்கின்றன. அதற்காக அவ்வப்போது, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தையும் நடத்துகின்றன.
ஆனால், பா.ஜ.,வில் மாவட்டத் தலைவர்களிடம், மாநிலத் தலைவரோ மற்ற நிர்வாகிகளோ, சட்டசபை தேர்தல் குறித்து, எந்த கருத்தையும் கேட்கவில்லை. விருப்ப மனு பெறவில்லை. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என, மாவட்டத் தலைவர்களிடம் கேட்கவில்லை. நாங்கள் எதற்காக பொறுப்பில் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இதனால் மற்ற கட்சிகளும் எங்களை மதிப்பதே இல்லை. இதை பல்வேறு வழிகளில், மாநிலத் தலைமையிடம் சொல்லியும் நிலைமை மாறவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்