Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'தொகுதி மறுவரையறை மசோதாவை எத்தனை முறையானாலும் தோற்கடிப்போம்': ராகுல்

'தொகுதி மறுவரையறை மசோதாவை எத்தனை முறையானாலும் தோற்கடிப்போம்': ராகுல்

துாத்துக்குடி: ''மிகப்பெரிய வரலாறைக் கொண்ட அ.தி.மு.க., மறைந்துவிட்டது; இப்போது இருக்கும் அ.தி.மு.க., மோடி, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது,'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்தார்.

'இண்டி' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு, துாத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய இடங்களில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டங்களில் ராகுல் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் சொல்கிறது. ஆனால், இந்த தேர்தல், முற்றிலும் தத்துவங்களுக்கு இடையே நடக்கும் போர்.

திராவிடத்திற்கும், தமிழுக்கும் எதிராக ஆர்.எஸ்.எஸ்., செயல்படுகிறது. அனைத்து மொழிகளும், அவர்கள் சொல்லும் மொழிக்கு முன் மண்டியிட வேண்டும் என நினைக்கின்றனர்.

அ.தி.மு.க.,வுக்கு கடந்த காலங்களில் மிகப் பெரிய வரலாறு உண்டு. அக்கட்சியில் மிகப் பெரிய தலைவர்கள் இருந்தனர். அப்படி இருந்த அ.தி.மு.க., இப்போது மறைந்து விட்டது. தற்போது இருக்கும் அ.தி.மு.க., வெறும் கூடு.

அதன் வாயிலாக, தமிழகத்திற்குள் புகுந்துவிட வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம். ஊழல் காரணமாக, பா.ஜ.,விடம் அ.தி.மு.க., சரணடைந்துவிட்டது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ளது.

பீஹாரை போல தான் தமிழகத்திலும் நடக்கப் போகிறது. முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அரசை, தமிழகத்தில் கொண்டு வருவதே அதன் திட்டம். பா.ஜ., தாங்கள் சொல்வதை நிறைவேற்றும் முதல்வரை கொண்டு வர முயல்கிறது.

முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் அப்படி நடந்துகொள்ள மாட்டார். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளன.

இந்தியாவுக்கு தமிழகம் முற்போக்கு பார்வையை தந்துள்ளது. தமிழக அரசியல், வரலாற்றுப்பூர்வமாக சமூக நீதியில் கால்பதித்துள்ளது. தமிழகத்தையும், தமிழ் மொழியையும் பாதுகாக்க, டில்லியில் போர் வீரனாக இருப்பேன்.

தமிழ்மொழிக்கு பல்லாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. ஒவ்வொரு மொழியும் சிதைக்கப்படாமல் பாதுக்காக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் அம்மாநில மக்களால் ஆளப்பட வேண்டும்.

தமிழகத்தில் மதிய உணவு திட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க.,வினரும் முதல்வர் ஸ்டாலினும் இந்த பணிகளை இன்னும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், அரசியல் சாசன சட்டத்தை ஏற்காத பா.ஜ., மாநில கூட்டாட்சியை பலவீனமாக்க முயல்கிறது.

எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் அதிகாரத்தை கைப்பற்றி, டில்லியில் இருந்து ஆளப்பார்க்கின்றனர். மகளிர் இட இதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதா வாயிலாக, நாட்டின் தேர்தல் கட்டுமானத்தை சிதைக்க சதித்திட்டம் தீட்டினர்.

பார்லி.,யில் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க திட்டமிட்டனர். எனவே தான், அதை பார்லியில் தோற்கடித்தோம். இனி எத்தனை முறை முயன்றாலும் ஒவ்வொரு முறையும் தோற்கடிப்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement