தேர்தலில் டில்லி அணியை வீழ்த்துவோம்: உதயநிதி
-நமது நிருபர் குழு -
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர்கள் சபரி கார்த்திகேயன் (கிணத்துக்கடவு), சுதாகர் (வால்பாறை), ஜெயக்குமார் (உடுமலை) மற்றும் பொள்ளாச்சி கொ.ம.க., வேட்பாளர் நித்தியானந்தன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி நேற்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: கிணத்துக்கடவு தொகுதிக்கு தி.மு.க., ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. சுந்தராபுரம், சிட்கோவில் தங்கநகை தொழில்பூங்கா அமைக்கும் பணி மற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, மதுக்கரை நகராட்சியில் ரூ.9 கோடி மதிப்பில் தார்சாலை, திருமலையம்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் தார் சாலை என பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின் சொன்னதுபோல இந்த தேர்தல் தமிழக அணிக்கும், டில்லி அணிக்குமான தேர்தல். டில்லி அணியை வீழ்த்தி தமிழக அணியாகிய தி.மு.க., அணியைவெற்றி பெற வைப்போம்.
பொள்ளாச்சி தனி மாவட்டம் தற்போது, பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளீர்கள்; மீண்டும் ஆட்சி அமைந்தவுடன், முதல்வரிடம் பேசி, மாவட்டம் உருவாக்கப்படும். தி.மு.க., ஆட்சியில், கால்நடை மருத்துவக்கல்லுாரி, அரசு மருத்துவமனை மேம்பாடு, பி.ஏ.பி., திட்டத்தை உருவாக்கியவர்களுக்கு சிலை, இனாம் நிலம், கோவில் நிலங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கட்டணமில்லா பஸ், காலை உணவுத்திட்டம், 8ம் வகுப்பு வரை விரிவாக்கம், மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு, 35 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப், கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ரூ.1,500, 10 லட்சம் பேருக்கு வீடு கட்டித்தரும் திட்டம், அனைத்து மகளிருக்கும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொள்ள, ரூ.8 ஆயிரத்திற்கு கூப்பன் வழங்கப்படும்.
தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்; காலை, 6:30 மணிக்கு, மூன்று மாதம், கோடை கால சிறப்பு நிதி என ரூ.5 ஆயிரமாக செலுத்தப்பட்டது. இவ்வாறு, பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்