Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


புதிய நிர்வாகிகள் தேர்வு எப்போது! தமிழக காங்கிரசில் எதிர்பார்ப்பு

புதிய நிர்வாகிகள் தேர்வு எப்போது! தமிழக காங்கிரசில் எதிர்பார்ப்பு

மதுரை: தமிழக காங்கிரசில், புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக காங்.,ல் மாநிலத் தலைவருக்கு அடுத்த நிலையில், துணைத் தலைவர், பொதுச்செயலர், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் போன்ற மாநிலப் பதவிகள் உள்ளன. இப்பதவிகளில், கடந்த 2019 -2024ல் கே.எஸ்.அழகிரி தலைவராக இருந்தபோது, பலர் நியமிக்கப்பட்டனர்.

அவரை அடுத்து பொறுப்பேற்ற, தற்போதைய தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை , இப்பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் பெயரை பரிந்துரை செய்தார். அதற்கான பட்டியல் அகில இந்திய தலைமைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கும் மேலாக புதிய நிர்வாகிகள் நியமனத்தில் இழுபறி நிலவு கிறது.

இதற்கிடையே, தற்போதைய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

அவரே, 'தேர்தலுக்கு பின், நான் விலகி விடுவேன்' என கூறி இருந்தார். இந்நிலையில், தேர்தல் வாயிலாக, புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு காங்கிரசார் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் நிலையில், புதிய மாநில நிர்வாகிகளையும் நியமிக்க டில்லி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து, காங்., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் 700, செயற்குழு உறுப்பினர்கள் 56, அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர்கள் 75, துணைத் தலைவர்கள் 6, பொதுச்செயலர்கள் 18, செயலர்கள் 25, என்ற எண்ணிக்கையில் நியமிக்கலாம்.

முன்னாள் மாநில தலைவர்கள், தற்போதைய எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு வேண்டிய விசுவாசிகளை நியமிக்குமாறு, 'கோட்டா' முறையை வலியுறுத்தி டில்லி தலைமையை முடிவு எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதால், இந்நியமனங்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக் கும் பட்சத்தில், இந்த நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது, தமிழகத்தில் ஆளும் கூட்டணி அரசிலும் அங்கம் வகிப்பதால், காங்.,கில் தலைவர் பதவிக்கு மவுசு கூடியுள்ளது. எனவே 10க்கும் மேற்பட்டோர் தலைவர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகின்றனர்.

Advertisement