எந்த கட்சியின் ஓட்டுகளை வாரிச்சுருட்டியது விஜய் அலை?: முழு விபரம்
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, வேறு எந்த கட்சியின் ஓட்டுகளில் கை வைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக 37.30 சதவீதம் (1,74,30,179) ஓட்டுகளுடன் 133 இடங்களை தனித்து வென்று ஆட்சியை பிடித்தது. அத்தேர்தலில் அதிமுக மட்டும் 33.29 சதவீதம் (1,53,91,055) ஓட்டுகளுடன் 66 இடங்களில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. நாம் தமிழர் கட்சி 6.58 சதவீதம் (30,42,307) ஓட்டுகளை பெற்று அனைத்து இடங்களிலும் தோற்றது.
இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 34.92 சதவீத ஓட்டுகளுடன் 108 இடங்களை கைப்பற்றியது. அதாவது 1,72,26,209 பேர் அக்கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். திமுக 24.19 சதவீதம் (1,19,29,144) ஓட்டுகளையும், அதிமுக 21.21 சதவீதம் (1,04,62,146) ஓட்டுகளையும், நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் (19,72,537) ஓட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்த தகவல்களின் படி விஜய் கட்சியின் அலையால் எந்த கட்சி அதிகம் பாதித்தது என கணக்கிடுகையில், திமுக.,விற்கு 13.11 சதவீதமும், அதிமுக.,விற்கு 12.08 சதவீதமும், நாதக.,விற்கு 2.58 சதவீதமும் ஓட்டு விகிதம் குறைந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், திமுக.,விற்கு 55,01,035 ஓட்டுகளும், அதிமுக.,விற்கு 49,28,909 ஓட்டுகளும், நாதக 10,69,770 ஓட்டுகளும் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது.
அப்படி பார்க்கையில், திமுக மற்றும் அதிமுக.,விடம் இருந்து 3ல் ஒரு பங்கு ஓட்டுகளை வாரி சுருட்டியிருக்கிறது விஜய் அலை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2021ல் திமுக பெற்ற ஓட்டுகளை விட 2026ல் தவெக 2,03,970 ஓட்டுகள் குறைவாகவே பெற்று ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்