யாருக்கு மெஜாரிட்டி: குழம்பும் தமிழக கட்சிகள்
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால், யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என தெரியாமல், தமிழக அரசியல் கட்சிகள் பெரும் குழப்பத்தில் உள்ளன.
கடந்த 23ம் தேதி, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.
அதை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, 'என்.டி.டி.வி., பீப்பிள்ஸ் பல்ஸ்' உட்பட, 10 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, 'டைம்ஸ் நவ் ஜே.வி.சி., சி.என்.என்.,' ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. த.வெ.க., 91 முதல் 120 இடங்களை பிடிக்கும் என, 'இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா', நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'டுடே சாணக்யா' நிறுவனம், நேற்று வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தி.மு.க.,வுக்கு 114 - 136; அ.தி.மு.க.,வுக்கு 34 - 56; த.வெ.க.,வுக்கு 52 - 74; மற்றவர்களுக்கு 0 - 2 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள், தி.மு.க., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கூறினாலும், டைம்ஸ் நவ், சி.என்.என்., போன்ற பிரபல நிறுவனங்கள், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என கூறியிருப்பது, தி.மு.க.,வினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட காலமாக கருத்து கணிப்புகளை நடத்தி வரும் இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், த.வெ.க.,வுக்கு 91 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், 'டுடே சாணக்யா' நிறுவனம் 52 முதல் 74 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறியிருப்பது, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியா டுடே கணிப்பு உண்மையானால், த.வெ.க., ஆட்சிக்கே வந்து விடும். டுடே சாணக்யா சொல்வது போல நடந்தால், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் அல்லது யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத திரிசங்கு நிலை ஏற்படும்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 8.22 சதவீத ஓட்டுகளை பெற்ற, நாம் தமிழர் கட்சிக்கு, இம்முறை ஓட்டுகள் குறையும் என, தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன.
இதனால், தமிழக அரசியல் கட்சிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. த.வெ.க., கணிசமான இடங்களை வென்றால், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
கருத்து கணிப்புகளும் குழப்புவதால், தமிழக அரசியல் கட்சிகள், தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளன. மே 4ம் தேதி முடிவு வந்தால் மட்டுமே, உண்மை நிலை தெரிய வரும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்