Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 யார் ஆட்சி அமைத்தாலும் அ.தி.மு.க.,வின் ஆதிக்கம் இருக்கும்!

 யார் ஆட்சி அமைத்தாலும் அ.தி.மு.க.,வின் ஆதிக்கம் இருக்கும்!

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., ஆகியவற்றில், எந்த கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் சரி, தொங்கு சட்டசபை ஏற்பட்டு கூட்டணி ஆட்சி உருவானாலும் சரி, ஆட்சியில் அ.தி.மு.க.,வினர் ஆதிக்கம் இருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பா.ஜ.,வின் 'பி' டீமாக அ.தி.மு.க., உள்ளது என, தி.மு.க.,வினர் கூறிவரும் நிலையில், அக்கட்சி அ.தி.மு.க.,வின் 'பி' டீமாக மாறியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் விலகலாக 32 பேர் உள்ளனர். அவர்களில் ஏழு பேர் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். வழக்கால் விலக்கப்பட்ட செந்தில் பாலாஜியையும் சேர்த்தால், எட்டு பேர். அதாவது, நான்கில் ஒருவர் அ.தி.மு.க., இறக்குமதி.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், சாத்துார் ராமச்சந்திரன் மட்டும் தான் அ.தி.மு.க., இறக்குமதியாக இருந்தார். இறக்குமதி அமைச்சர்கள், வெறுமனே மற்ற அமைச்சர்களை போல் காலம் தள்ளாமல், தி.மு.க.,விற்காக அதிகம் உழைக்கும் அமைச்சர்கள் என்று பெயர் எடுத்தனர்.

சென்னை மாநகராட்சியை, இன்றுவரை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சேகர்பாபு, காலை தன் வீட்டில் பல் துலக்கி, குளித்துவிட்டு, காரில் ஏறி முதல்வர் வீட்டிற்கும் துணை முதல்வர் வீட்டிற்கும் சென்று, அங்கு வணக்கம் செலுத்திவிட்டுதான் மற்ற காரியங்களில் ஈடுபடுவார். முதல்வர் தொகுதியான கொளத்துாருக்கும் அவரே நேரடி நிர்வாகி.

அரசில் எழும் பிரச்னைகளை சமாளிப்பது, இடைத்தேர்தல் நிர்வாகம், கூட்டணி கட்சிகளுக்கு நிதி ஆகியவற்றை, வேலு மற்றும் செந்தில் பாலாஜி கவனித்துக்கொள்வர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை சமாளிப்பதை, ரகுபதி முழுநேர பணியாக செய்தார். அதனால், இந்த நால்வர் மீதும் முதல்வருக்கு நல்ல அபிமானம் உண்டு.

இந்த நால்வர் அணியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வளர்வது, தி.மு.க.,வில் இருந்த ஒரிஜினல் நால்வரான நேரு, பொன்முடி, எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி -அணிக்கு பிடிக்கவில்லை. இருப்பினும், இறக்குமதி நால்வரின் கையே ஐந்தாண்டுகளும் ஓங்கி இருந்தது.

சைவம் மற்றும் வைணவத்தை தரக்குறைவாக பேசியதால், பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட போது, அவரது கட்சி பதவியை பறிக்கக்கூடாது என, முதல்வர் ஸ்டாலினிடம், ஒரிஜினல் நால்வரில், மற்ற மூவரும் நேரில் சென்று பொன்முடிக்கு ஆதரவாக பேசினர். ஆனால் எடுபடவில்லை. காரணம், இறக்குமதி நால்வர் மறுத்துவிட்டனர்.

இவர்களது பேராதிக்கத்தால், 2021 - -26 தி.மு.க., ஆட்சியை ஒரு பகுதி அ.தி.மு.க., ஆட்சியாகவே கருதினாலும் மிகையாகாது. இந்த தேர்தலுக்கு பின், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைத்தால், அந்த அமைச்சரவையில், அ.தி.மு.க., இறக்குமதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், அதிகரித்துள்ள இறக்குமதி வேட்பாளர்கள்.

இது, தற்போதே அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் தி.மு.க., வினரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

11.6 சதவீதம்


கடந்த 1997ல், மத்தியில் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த போது, ராணுவ இணை அமைச்சராக இருந்த என்.வி.என்.சோமு, விமான விபத்தில் மறைந்ததும், அவரது வாரிசு, தேர்தலில் போட்டியிட 'சீட்' கேட்டார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் சம்மதிக்கவில்லை.

கட்சியில் கூட்டம், போராட்டமெல்லாம் நடத்திய அனுபவம் இருந்தால் தான், தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியும் என்றார்.

சில ஆண்டுகளுக்கு பின், ஸ்டாலின் தயவில் தான், என்.வி.என்.சோமு மகள் டாக்டர் கனிமொழிக்கு, சட்டசபை தேர்தலில் தி.நகரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. மாற்று கட்சியிலிருந்து வருவோருக்கு, உடனடியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நடைபெற உள்ள ச ட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,விற்கு வந்த 19 பேருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வ ழங்கப்பட்டுள்ளது (பட்டியலை பார்க்க). தி.மு.க., போட்டியிடும் 164 தொகுதிகளில், 11.6 சதவீதம் அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இத னால், அ.தி.மு.க.,வின் 'பி' டீம் போல், தி.மு.க., உருவெடுத்து உள்ளது.

சர்வவியாபி


இன்றைய நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறியவர்கள், தி.மு.க.,வில் மட்டுமின்றி பல கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அ.தி.மு.க.,விலிருந்து த.வெ.க.,வுக்கு சென்றவர்களில், எட்டு பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

1. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம்

2. நிர்மல்குமார் - திருப்பரங்குன்றம்

3. முன்னாள் எம்.பி., சத்யபாமா - திருப்பூர் வடக்கு

4. முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன் - ஆயிரம்விளக்கு

5. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் - லால்குடி

6. வி.எஸ்.பாபு - கொளத்துார்

7. ரெட்டியார்பட்டி நாராயணன் - நாங்குநேரி

8. லோகேஷ் தமிழ்செல்வன் - ராசிபுரம்

த.வெ.க., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும், தொங்கு சட்டசபை ஏற்பட்டு கூட்டணி அமைச்சரவையில் அக்கட்சி இடம்பெற்றாலும், இவர்களில் சிலராவது அதில் இடம் பெறுவர்.

அதே போல், அ.தி.மு.க.,விலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார். அ.ம.மு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும், முன்னாள் அ.தி.மு.க.,வினர் தான். இவ்வாறு, அ.தி.மு.க.,வினர் தமிழக அரசியலில் சர்வவியாபியாக உள்ளனர். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைத்தாலும் முன்னாள் அல்லது இன்னாள் அ.தி.மு.க.,வினரை தவிர்க்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க., பங்கு அதில் கட்டாயம் இருக்கும்.

Advertisement