வி.சி.க., அலுவலகத்திற்கு சோபா வந்தது ஏன்? திருமாவளவன் திடீர் விளக்கம்
சென்னை: ''நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த சோபா தான், எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்தது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி: முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களை தொடர்வதாக முதல்வர் விஜய் உறுதி அளித்தார். இது தொடர்பாக, வி.சி.க., - எம்.எல்.ஏ., வன்னி அரசு, சட்டசபையில் வலியுறுத்தி இருந்தார்.
அந்த வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில், 'சோபா அரசியல்' என்ற விமர்சனத்தை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி முன்வைத்துள்ளார்.
அ.தி.மு.க.,வின் ஒரு அணி தலைவர்களை, முதல்வர் விஜய் சந்திக்க சென்றபோது, சோபா எடுத்து செல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, அவர் பேசி இருக்கிறார்.
எங்களை பற்றி உதயநிதி பேசவில்லை. நாங்கள் ஏற்கனவே, 'ஆர்டர்' செய்த சோபா தான், எங்கள் அலுவலகத்துக்கு வந்தது. அங்கு முதல்வர் விஜய் வருகை தரவில்லை.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.வும் இணைந்து, என்னை முதல்வராக்க முயற்சிக்கின்றன என நண்பர்கள் தெரிவித்தனர். அது குறித்த விபரம் எனக்கு தெரியாது.
ஏற்கனவே சொன்னது போல, 'கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் முடிவையொட்டி , எங்கள் முடிவு இருக்கும். அதை உயர்நிலை குழு கூடி முடிவு செய்வோம்' என்றேன்.
அதேபோல, உயர்நிலை குழு கூடி முடிவு எடுக்கப் பட்டது. அரசியலில் என்னை முன்னிறுத்தி என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. தேவையென்றால், தி.மு.க.,விடம் அதை கேளுங்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்