Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கரைபுரண்ட கரன்சி; தீர்ப்பை மாற்றி எழுதுமா?

கரைபுரண்ட கரன்சி; தீர்ப்பை மாற்றி எழுதுமா?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பூர்: பரபரப்போடு தேர்தல் ஓய்ந்திருக்கிறது. இப்போது திருப்பூர் மாவட்டத்தின் டீக்கடைகள் முதல் சொகுசு மால்கள் வரை விவாதிக்கப்படும் ஒரே விஷயம் 'பணப் பட்டுவாடா' தான்.

வடக்கு, தெற்கு முதல் மடத்துக்குளம் வரை எட்டுத் தொகுதிகளிலும் கடைசி நேரத்தில் பெய்த 'பண மழை', தேர்தல் முடிவுகளில் சில அதிரடி மாற்றங்களை உருவாக்கும் என்பது அரசியல் புள்ளிகளின் கணக்கு.

எங்கும் கரன்சிமயம்


அ.தி.மு.க-.வின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்ணில், அந்தக் கட்சியின் செல்வாக்கைச் சிதைக்க தி.மு.க. தரப்பில் காலனி மற்றும் தொழிலாளர் பகுதிகளில் 'தாராளம்' காட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

ஓட்டுக்கு 500 முதல் 2,000 ரூபாய் வரை கைமாறியுள்ள நிலையில், அ.தி.மு.க-.வோ தன் பங்குக்குத் தன் 'உறுதி'யான ஓட்டு வங்கியைத் தக்கவைக்க அதே பாணியைப் பின்பற்றியுள்ளது. மாவட்டத்தில் மட்டும் பல நுாறு கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

ஆனால், “வாங்குவது ஒரு கட்சி; ஓட்டு போடுவது இன்னொரு கட்சி” என்ற வாக்காளர்களின் ரகசிய சுபாவம், இந்த நுாறு கோடிகளையும் செல்லாக்காசாக்குமா என்பது மே 4-ல் தெரிந்துவிடும்.

மவுனப்புரட்சி நடக்குமா?


பணம் ஒருபுறம் இருந்தாலும், திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், சிறு குறு தொழில்முனைவோரும் ஒரு 'மவுனப் புரட்சி'க்குத் தயாராகியுள்ளனர். இவர்களுக்குத் தேவை 'தொழில் பாதுகாப்பு'. கடந்த சில ஆண்டுகளாகப் பங்குச்சந்தை போல எகிறும் நுால் விலை உயர்வு, சிறு நிறுவனங்களின் முதுகெலும்பை உடைத்துள்ளது.

“விலையைக் குறைக்கத் தவறிய மத்திய அரசா? அல்லது அழுத்தம் கொடுக்கத் தவறிய மாநில அரசா?” என்ற இரட்டை முனைத் தாக்குதல் தி.மு.க. மற்றும் பா.ஜ. ஆகிய இரு தரப்பிற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

'ஜாப் ஒர்க்' வரிச்சுமை மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை திருப்பூரின் தையல் இயந்திரங்களைச் சற்றே தள்ளாடச் செய்திருக்கின்றன.

எல்லாவற்றையும் விட, மின்கட்டண உயர்வு தொழில்துறையினரை நிலை குலையச் செய்திருக்கிறது. வங்கிக் கடன்களைத் திருப்பிக் கட்ட முடியாமல் தவிக்கும் இவர்களுக்கு, 'கடன் தள்ளுபடி அல்லது வட்டிச் சலுகை' என்ற வாக்குறுதியை ஆக்கப்பூர்வமாக யார் நிறைவேற்றுவார்கள் என்பதே தற்போதைய தேர்வு.

ஜாதி அடிப்படையிலான ஓட்டுகள் சிதறலாம்; பண வினி யோகம் திசை திருப்பலாம்; ஆனால், திருப்பூரின் 'பசி'யையும் 'தொழில் நலிவை'யும் தீர்க்கும் வேட்பாளருக்கே இந்த தொழில் நக ரம் தன் 'மை' முத்திரையை அழுத்தமாகப்பதித்திருக்கும்.

Advertisement