திருப்பூரில் தொழிலாளர் தங்கும் விடுதிகள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதி களில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் சாமிநாதன் (காங்கயம்), தினேஷ்குமார் (திருப்பூர் தெற்கு), செல்வராஜ் (பல்லடம்), டாக்டர் கோகிலாமணி (அவிநாசி), டாக்டர் இந்திராணி (தாராபுரம்), ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்), ஜெயக்குமார் (உடுமலை), இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி (திருப்பூர் வடக்கு) ஆகியோரை ஆதரித்து, திருப்பூர் பாண்டியன் நகரில், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
திருப்பூரில் நொய்யல் ஆறு மேம்பாடு; பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டத்தில் கால்வாய் துார் வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, தாராபுரம் தொகுதிக்கு அரசு கலைக்கல்லுாரி, சொர்ணபுரி லே அவுட் பகுதியில் உயர்மட்ட பாலம், ஜம்மனை ஓடை அருகே உயர்மட்ட பாலம், கீழக்கோவிலில் பஸ் ஸ்டாண்ட், பில்லுார் அணையை மையப்படுத்தி பல குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள், காங்கயம் அரசு மனைக்கு புதிய கட்டடம், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம்.
வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், உடுமலை பேட்டையில் விடுதலை போராட்ட எத்தலப்ப நாயக்கருக்கு திருவுருவச் சிலை மற்றும் அருங்காட்சியகம், சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம், 5 சிறிய அளவிலான ஜவுளிபூங்காக்கள், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் மினி டைடல் பார்க், 328 கோவில்களில் திருப்பணிகள், கொங்கல் நகர் கிராமத்தில்முதற்கட்ட அகழாய்வு நிறைவு, தாராபுரம் தெற்கு கிராமத்தில் கல்லிசை மண்டபம் தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள திருப்பூரில் பெண்கள் எளிதாக வேலைக்கு சென்று வர எளிதாக, குழந்தைகள் காப்பகம் உருவாக்கப்படும். திருப்பூரில், தேசிய வடிவமைப்பு நிறுவனம், தேசிய ஆடை தொழில் நுட்ப நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளித்தொழில் நவீனமயமாக்கப்பட்டு, கோவை, திருப்பூர், கரூரில், 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள், தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி மையமாக தமிழகத்தை கொண்டு வரப்படும்.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், துணை பொது செயலாளர் சாமிநாதன், துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மண்டல பொறுப்பாளர்கள் சக்கரபாணி, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, அமைச்சர் கயல்விழி, மாவட்ட கழக செயலாளர்கள் செல்வராஜ், எம்.பி. ஈஸ்வரசாமி, பத்மநாபன், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்