த.மா.கா.,வுக்கு 5 சீட்: தாமரையில் போட்டி
சென்னை: கூட்டணியில், 10க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டு நேற்று இரவு வரை போராடிக் கொண்டிருந்த த.மா.கா.,வுக்கு ஐந்து தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கியுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேற்று இரவு சந்தித்தார் த.மா.கா., தலைவர் வாசன். அப்போது அங்கிருந்த மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், த.மா.கா.,வுக்கு ஐந்து தொகுதிகளை கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்து பேச, அதை ஏற்றுக் கொண்டார்.
பின், மகிழ்ச்சியோடு வாசன் அளித்த பேட்டி: தே.ஜ., கூட்டணி வெற்றிக் கூட்டணி. வரும் தேர்தலில் இக்கூட்டணி 200 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறும். மற்ற கட்சிகளைப் போல, த.மா.கா.,வும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பேச்சு நடத்தியது. தற்போது சுமுகமான முடிவு ஏற்பட்டு, ஐந்து தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். மகிழ்ச்சியாக உள்ளது.
த.மா.கா.,வுக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் என, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில், த.மா.கா., தாமரை சின்னத்தில் போட்டியிடும். இவ்வாறு, அவர் கூறினார்.
வாசனை தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனுக்கு தே.ஜ., கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் அளித்த பேட்டி: தென் மாவட்டங்களில் தமிழக முன்னேற்றக் கழகத்துக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள பொதுத் தொகுதியான ராஜபாளையம் தொகுதியை ஒதுக்கி உள்ளனர். அது மன நிறைவாக உள்ளது. பட்டியல் இனத்தில் இருந்து எங்கள் மக்களை வெளியே கொண்டு வர பாடுபட்டு வருகிறோம். அந்த முயற்சிக்கு இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்