Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அதிமுக - திமுக - பாஜ மும்முனை தாக்குதல்; த.வெ.க.,வுக்கு முட்டுக்கட்டை

அதிமுக - திமுக - பாஜ மும்முனை தாக்குதல்; த.வெ.க.,வுக்கு முட்டுக்கட்டை

- நமது டில்லி நிருபர் -
'தமிழகத்தில் நிகழும் அனைத்து அரசியல் முட்டுக்கட்டைகளுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துடன் அவசரமாக காங்கிரஸ் ஒட்டிக் கொண்டதே காரணம்' என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் முழு கவனமும் மேற்கு வங்க மாநிலம் மீது மட்டுமே இருந்தது; தமிழகம் மீது அவ்வளவாக இல்லை. தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் வென்றாலும், தனிப்பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க.,வுடன் காங்கிரஸ் இணைந்ததுடன், அமைச்சரவையிலும் இடம் பெறுவதாக வெளியான தகவலை, பா.ஜ., மேலிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகே, அத்தனை காய் நகர்த்தல்களும் ஆரம்பமாகின.

இதற்கிடையே, விஜயின் த.வெ.க., ஆட்சியமைக்கப் போகிறது என்பதை எதிர்பார்க்காத தி.மு.க., - அ.தி.மு.க., உறைந்து போய், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தன. அவர்களுக்கு, டில்லி அதிகார வட்டத்தில் அனல் அடிக்கத் துவங்கிவிட்ட தகவல், உரியவர்கள் வாயிலாக சென்னைக்கு வந்து சேர்ந்தது. குறிப்பாக, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற பெயரில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், வி.வி.ஐ.பி., வாயிலாக விலாவாரியாக நேரடியாகவே விளக்கப்பட்டது.தமிழகத்தில் விஜயும், ராகுலும் கைகோர்த்தால், மத்தியில் ஆட்சியை பா.ஜ., மீண்டும் பிடிப்பதில் சிக்கல் ஏற்படும். பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ள தமிழகத்தின் தென் மாவட்டங்களை, அந்த கூட்டணி அள்ளிக் கொண்டு போய் விடும். மேலும், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என தென் மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு பேரிடியாக அமையலாம்.

அதேபோல, கூட்டணி பலத்தால் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் கரை சேரும் வரலாறு உடைய தி.மு.க.,வுக்கு, இன்னும் பலமான பாதிப்பு ஏற்படும். முக்கிய கூட்டாளியான காங்கிரஸ் போனதால், மதச்சார்பின்மை, சிறுபான்மையினரின் காவலன் போன்ற கவசத்திற்கும் பாதகம் ஏற்படும். மேலும், கம்யூனிஸ்டுகள், வி.சி.க., போன்ற கட்சிகளும் தி.மு.க.,வை விட்டு போய்விட்டால், அக்கட்சியின் நிலைமை படுமோசமாகி விடும்.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை அந்த கட்சி பக்கம் காங்கிரஸ் செல்ல நிரந்தரமாகவே வாய்ப்பு ஏற்படாது. அது, அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை சுருக்கி விடும். இந்த பின்னணியில் தான், காங்கிரஸ் ஆதரவை த.வெ.க., ஏற்பதை தடுக்க வேண்டும் என்ற கடைசி நிமிட முயற்சி தான், 'த.வெ.க.,வுக்கு அ.தி.மு.க., ஆதரவு தர முன்வருகிறது' என்ற செய்திக்கு காரணம். இதுவும் கூட டில்லியின் ஆசியுடன் தான் நடந்தது.

கடந்த 60 ஆண்டுகளாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பகிர்ந்து கொண்டது, அரசியல் அதிகாரம் மட்டுமல்ல; சமூக பொருளாதார அதிகாரங்களும் தான். இரு கட்சிகளிலும் அதிகாரம் செலுத்தி வந்த லாபிகள் எல்லாமே, என்ன பின்புலம் என்றே தெரியாத புதிய நபர்களிடம், அனைத்து அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அரசு ஒப்பந்தங்கள், மண் அள்ளுவது, மது சப்ளை செய்வது என எதுவாக இருந்தாலும், இரு கட்சிகளுமே ஒரே ஏற்பாட்டில் தான் இயங்குகின்றன. இந்த இரு தரப்பையும் மீறி, புது ஒப்பந்ததாரர் நுழைய முடியாது. இதை எல்லாம், தொடர்பே இல்லாத ஒருவருக்கு விட்டுக் கொடுப்பதை, கனவிலும் ஏற்க மாட்டார்கள்.

இவை அனைத்தும் சேர்ந்த பின்னணியில் தான், காங்கிரசுடன் விஜய் சேர்ந்த மறு வினாடியே, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., ஆகியவற்றுக்கு பொது எதிரியாக விஜய் மாறி விட்டார். அ.தி.மு.க., - தி.மு.க., இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மையே. அதன் முழு விபரங்கள் உடனடியாக தெரியாமல் போனாலும், வெகு விரைவில் அவை அனைத்தும் வெளியாகும்.

த.வெ.க., - காங்கிரஸ் தங்களுக்கு எதிரான ஆபத்தான கூட்டணி என்று, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., ஆகிய மூன்று கட்சிகளுமே கருதுகின்றன. பின்விளைவுகளை யோசிக்காமல், காங்கிரஸ் ஆதரவை உடனே ஏற்றுக் கொண்டதால் தான் த.வெ.க., தவிக்கிறது.

காங்கிரஸ் காட்டிய அவசரத்தால், த.வெ.க.,வுக்கு எதிராக இத்தனை வியூகங்கள் கிளம்பி, மும்முனை தாக்குதலில் அக்கட்சி சிக்கி, தமிழக அரசியல் சூழ்நிலைகளும் மாறிப்போய் கிடக்கின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement