ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அ.தி.மு.க. வேட்பாளர் சபதம்
பல்லடம்: நாதேகவுண்டம்பாளையம் கிராமத்தில், பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரமசிவம்,- விவசாய சங்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது:
ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம், கள்ளுக்கான தடை நீக்கம் ஆகிய பிரதான கோரிக்கைகள் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின், 60 ஆண்டுகால கனவு திட்டமான அத்திக்கடவு- - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது போல், இத்திட்டங்களும் அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வர் ஸ்டாலினை, இனி, முன்னாள் முதல்வர் என்றே கூறலாம். விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி மீண்டும் வரவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. வேட்பாளர் பரமசிவம் பேசுகையில், ''தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும், ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும். மேலும், அத்திக்கடவு- திட்டத்தில், பல்லடம் பகுதி குளம் - குட்டைகளுக்கும் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
முன்னதாக, விவசாய சங்க முன்னாள் தலைவர் என்.எஸ்.பழனிசாமியின் நினைவிடத்தில், வேட்பாளர் பரமசிவம், மலர்கள் துாவி மரியாதை செலுத்தினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்