ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டது பாஜ: தொகுதி மறு வரையறை விவகாரத்தில் இபிஎஸ் பதிலடி
பல்லடம்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முகத்தில் பாஜ கரி பூசிவிட்டது என இபிஎஸ் கூறினார்.
பல்லடம் திருப்பூர் சாலையில் இபிஎஸ் பேசியதாவது: ஸ்டாலின் கருப்புச் சட்டை போட்டிருக்கிறார், மே 4ம் தேதிக்கு பிறகு கருப்புச் சட்டை போட்டுக்கொள்ளுங்கள். இப்போது எதற்கு கருப்புச்சட்டை? பார்லிமென்டிலும், சட்டசபைகளிலும் 33% இடஒதுக்கீடுக்கு ஜெயலலிதா முதலில் குரல் கொடுத்தார். 1998ல் ஜெயலலிதா வேண்டுகோளை ஏற்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஒப்புக்கொண்டார்.
தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக அந்த மசோதாவை தாக்கல்செய்தார். இண்டி கூட்டணியில் உள்ள இருந்த முலாயம்சிங் யாதவ் அந்த மசோதாவை தம்பிதுரையிடம் இருந்து பிடுங்கி கிழித்தெறிந்தார். அப்போது நின்றுபோனது. ஜெயலலிதா அப்போதே அமல்படுத்த முயன்றார். இன்று பிரதமர் மோடி பெண்களுக்குச் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றப்பட்டு, இன்று வடிவம் கொடுக்கிறார்கள்.
லோக்சபா தொகுதி மறுவரையறை செய்கிறார்கள். அதற்கு ஸ்டாலின் கருப்புச் சட்டை போட்டார். ஊர் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றச் சொன்னார். நான் வரும் வழியில் எங்கேயும் கருப்புக் கொடி பார்க்கவில்லை. தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிறார். தமிழகத்திற்கு சதவீதம் குறையாது என்று சொல்லிவிட்டார்.
அதன்பிறகும் வேண்டுமென்றே இன்று மாலை 7 மணிக்கு நடந்த கூட்டத்தில் கருப்புச் சட்டை போட்டிருக்கிறார். அமித்ஷா பேசியதை வைத்துக்கொண்டு இபிஎஸ் சொல்கிறார். அதை தண்ணீரில் தான் எழுதி வைக்கவேண்டும் என்றார். இப்போது லோக்சபாவில் உள்துறை அமைச்சர் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தமிழகத்துக்கு 59 தொகுதிகள் என்று அறிவித்துவிட்டார். ஏற்கனவே 7.18% இருக்கிறது, ஸ்டாலின் குறைந்துவிடும் என்றார். இப்போது 7.23% ஆகியிருக்கிறது. 0.5% கூடியிருக்கிறது. இப்போது சட்டையைக் கழற்ற வேண்டியதுதானே. ஒன்றும் தெரியாத முதல்வர். உளவுத்துறை அவருக்கு கருப்புச் சட்டையை கழற்றிவிடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக தொகுதிகளை உயர்த்துகிறது. நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது, ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டது பாஜ.
இன்னொருத்தர் சிதம்பரம். அமித்ஷா சொன்னதை இபிஎஸ் சொல்கிறார், அதெல்லாம் நடக்குமா என்று கேட்டார். நடந்துவிட்டது. சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார், எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களைப் பார்ப்பீர்கள். உள்துறை அமைச்சராக, நிதியமைச்சராக இருந்து தமிழகத்துக்கு எதுவும் செய்யாதவருக்கு நம்மை பற்றி பேச தகுதி இருக்கிறதா? நிதியை அள்ளிக் கொடுத்திருக்க வேண்டாமா..? அதற்கு மனசு வராது. ஓட்டு வாங்கும் வரை பேசுவார்கள், ஓட்டு வாங்கியதும் மறந்துவிடுவார்கள்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்